டி20 உலகக் கிண்ணத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போட்டி உறுதி செய்யப்பட்டதை அடுத்து ரசிகர்கள் கடைசி நேர பயண ஏற்பாடுகளை செய்து வருவதால் டெல்லி மற்றும் மும்பை தொடக்கம் இலங்கைக்கான டிக்கெட் விலை கணிசமாக அதிகரித்துள்ளது.
எதிர்வரும் பெப்ரவரி 15 ஆம் திகதி கொழும்பு, ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறவிருக்கும் இந்தப் போட்டியை புறக்கணிக்கும் முடிவை பாகிஸ்தான் கடந்த திங்கட்கிழமை இரவு கைவிட்டது. அது தொடக்கம் போட்டியை காண்பதற்காக இலங்கை வருவதற்கான முயற்சிகளை இந்திய ரசிகர்கள் தீவிரப்படுத்தி உள்ளனர்.
இதனால் டெல்லி தொடக்கம் கொழும்புக்கான விமான டிக்கெட் வழக்கமாக இந்திய நாணயப்படி 30,000 ரூபாவாக இருந்தது தற்போது 90,000 ரூபாவை தாண்டியுள்ளது. இதே பாதையில் வர்த்தக வகுப்புக்கான டிக்கெட் 2,25,000 ரூபா வரை உச்சம் பெற்றுள்ளது. மும்பை தொடக்கம் கொழும்பு வரையான விமான டிக்கெட் விலையும் இவ்வாறு அதிகாரித்திருப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேபோன்று கொழும்பில் ஹோட்டல் கட்டணங்களும் அதிகரித்திருப்பதாக அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை இந்தியா – பாகிஸ்தான் போட்டியை காண்பதற்கான டிக்கெட் விலையும் இரண்டாம் நிலை சந்தையில் சுமார் ஒரு இலட்சம் இலங்கை ருபா வரை அதிகரித்திருப்பதாக தெரியவருகிறது. போட்டிக்கான டிக்கெட்டுகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் கிடைப்பதாலேயே அதற்கான கேள்வி அதிகரித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.


