டி20 உலகக் கிண்ணத்தில் ஆட இலங்கை வந்தது பாகிஸ்தான்

febr4

டி20 உலகக் கிண்ணத்தில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் அணி நேற்று முன்தினம் (02) இலங்கை வந்தடைந்தது.

இந்தியாவுக்கு எதிரான முக்கியமான போட்டியை புறக்கணிப்பதாக அறிவித்த நிலையிலேயே பாகிஸ்தான் அணி இம்முறை உலகக் கிண்ணத்தில் பங்கேற்கவுள்ளது. அத்துடன் உலகக் கிண்ணத்தை இலங்கையுடன் இணைந்து நடத்தும் நாடான இந்தியா செல்லாத அந்த அணி தனது அனைத்துப் போட்டிகளையும் இலங்கையிலேயே ஆடவுள்ளது.

இலங்கை வருவதற்கு முன்னர் ஊடகங்களுக்கு பேசிய பாகிஸ்தான் அணித் தலைவர் சல்மான் அலி அகா, ‘நாங்கள் சபையுடன் ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரர்கள், எங்கள் அரசாங்கமும் சபையும் எந்த முடிவை எடுத்தாலும், அனைத்து வீரர்களும் அதற்கு உடன்படுவோம்’ என்றார். ‘எங்களுக்கு இன்னும் மூன்று குழு போட்டிகள் உள்ளன, எனவே அவை அனைத்தையும் வென்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற முயற்சிப்போம்’ என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கை வந்திருக்கும் பாகிஸ்தான் அணி நேற்று (03) ஓய்வு எடுத்த நிலையில் இன்று உலகக் கிண்ணத்திற்கான ஒரே ஒரு பயிற்சிப் போட்டியாக அயர்லாந்தை எதிர்கொள்ளவுள்ளது. இந்தப் போட்டி கொழும்பு, எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெறவுள்ளது.

டி20 உலகக் கிண்ணத்தில் இந்தியாவின் போட்டி தவிர்த்து பாகிஸ்தான் அணி எஞ்சிய மூன்று போட்டிகளையும் இதே எஸ்.எஸ்.சி. மைதானத்திலேயே ஆடவுள்ளது. டி20 உலகக் கிண்ணத்தில் இந்தியாவுடன் ஏ குழுவில் இடம்பெற்றிருக்கும் பாகிஸ்தான் அணி அந்தக் குழுவின் எஞ்சிய போட்டிகளில் நெதர்லாந்து (பெப்ரவரி 7), அமெரிக்கா (பெப்ரவரி 10) மற்றும் நமீபிய (பெப்ரவரி 18) அணிகளை எதிர்கொள்ளவுள்ளது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி பெப்ரவரி 15 ஆம் திகதி கொழும்பு, ஆர். பிரேமதாச மைதானத்தில் நடத்த ஏற்பாடாகியுள்ளது.