டி20 உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் நான்கு ஆரம்ப சுற்று போட்டிகளுக்கும் அணியின் வேகப்பந்து வீச்சு ஆலோசனை பயிற்சியாளராக லசித் மாலிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும் அணித் தலைவருமான மாலிங்க கடந்த மாதம் வரை அணியின் வேகப்பந்து வீச்சு ஆலோசனை பயிற்சியாளராக குறுகிய காலம் செயற்பட்ட நிலையிலேயே அவர் மீண்டும் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இதன்படி அவர் எதிர்வரும் பெப்ரவரி 5 ஆம் திகதி தொடக்கம் இலங்கை அணியுடன் பணியாற்றவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் பெப்ரவரி 7 ஆம் திகதி இலங்கை மற்றும் இந்தியாவில் ஆரம்பமாகும் டி20 உலகக் கிண்ணத்தில் இலங்கை அணி பி குழுவில் இடம்பெற்றுள்ளது. இதன் குழு நிலை போட்டிகளுக்கு மாலிங்க பயிற்சி ஆலோசனைகளை வழங்கவுள்ளார். குறிப்பாக அணியின் வேகப்பந்து வீச்சை பலப்படுத்துவது மற்றும் இறுதி ஓவர்களை கையாள்வது தொடர்பில் அவர் அதிக அவதானம் செலுத்தவிருப்பதாக கூறப்படுகிறது.
லசித் மாலிங்க கடந்த காலங்களிலும் இலங்கை அணிக்கு அவ்வப்போது பயிற்சிகளை வழங்கி வந்தார். கடைசியாக அவர் கடந்த டிசம்பர் 15 தொடக்கம் ஒரு மாத காலம் தேசிய அணிக்கு வேகப்பந்து வீச்சு பயிற்சி ஆலோசனைகளை வழங்கி இருந்தார்.
அவரது ஒப்பந்தக் காலம் முடிவுற்ற நிலையில் அதனை நீடிக்கும்படி இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளர் சனத் ஜயசூரிய கேட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் பயிற்சியாளராக செயற்பட்டு வரும் லசித் மாலிங்க இந்திய பிரீமியர் லீக்கில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் அதன் இணை அணிகளான எம்.ஐ. நியூயோர்க் மற்றும் எம்.ஐ. கேப் டவுன் அணிகளுக்கும் பயிற்சியாளராக செயற்படுகிறார்.


