மாணவர்களுக்கு முதல் கட்டமாக ரூ. 25,000 வழங்கிவைப்பு

01 2
72 சதவீதமானோருக்கு கொடுப்பனவு வழங்கல்

தித்வா புயல் உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களில் இதுவரை 72 சதவீதமான மாணவர்களுக்கு முதல் கட்டமாக 25 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சின் செயலாளர் ஆலோக பண்டார தெரிவித்தார்.

அதாவது இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட 195,154 பாடசாலை மாணவர்களில் 14,382 பேருக்கே முதல் கட்ட 25 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் கூறினார். இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட சகலருக்கும் நிவாரணம் வழங்கப்படுமெனத் தெரிவித்த அவர், இந்த அனர்த்தங்களுக்கு முழு நாடுமே முகங்கொடுத்துள்ளதால் தகவல் கோரலில் சற்றுத் தாமதம் காணப்படுவதாகவும் ஆயினும் பாதிக்கப்பட்ட சகலருக்கும் நிவாரணம் வழங்கப்படுமெனவும் உறுதியளித்தார். இது தொடர்பாக மேலும் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர்,

” கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தித்வா புயல் மற்றும் மழையுடனான காலநிலையால் முழு நாடும் பாதிக்கப்பட்டது. கடந்த காலத்தில் ஏதேனும் அனர்த்தத்தால் ஒரு சில மாகாணங்கள் அல்லது மாவட்டங்களே பாதிக்கப்படும். ஆனால் இம்முறை இத்தாக்கத்தால் முழு நாடும் பாதிக்கப்பட்டது. தித்வா புயல் தாக்கத்தால் ஏற்பட்ட நேரடிப் பாதிப்புகளால் தொலைத்தொடர்பு சேவை முழுமையாக துண்டிக்கப்பட்டது. காலநிலை இயல்பு நிலைக்கு திரும்பியதன் பின்னரே தொலைத்தொடர்பு சேவை கட்டம் கட்டமாக வழமைக்குத் திரும்பியது. தொலைத்தொடர்பு சேவை வழமைக்குத் திரும்பிய பின்னரே பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது” என்றார்.