ஈரான்–அமெரிக்கா இடையில் பரஸ்பர எச்சரிக்கையால் போர் பதற்றம் உச்சம்

j30

-வளைகுடாவில் அமெரிக்க படை பலம் அதிகரிப்பு

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் படை பலத்தை குவித்து வரும் அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்துவது குறித்து எச்சரிக்கை விடுத்து வருவதோடு பதில் தாக்குதலுக்கு தயாராக இருப்பதாக ஈரான் கூறி வரும் நிலையில் ‘போர் பதற்றம்’ அதிகாரித்துள்ளது.

ஈரானுடன் அணுத் திட்டம் தொடர்பில் உடன்படிக்கை ஒன்றை எட்டுவதற்கான காலம் கடந்து செல்வதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டிருப்பதோடு, ஈரானை நோக்கி பாரிய படை ஒன்று மிக விரைவாக அதிக பலத்துடனும், உற்சாகத்துடனும், இலக்குடனும் முன்னேறி வருகிறது என்றும் எச்சரித்துள்ளார். அமெரிக்காவின் மிகப்பெரிய கடற்படை ஒன்று வளைகுடாவில் நிலைநிறுத்தப்பட்டிருப்பது குறித்தே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதற்கு பதில் அளித்திருக்கும் ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி, தரை அல்லது கடலால் இடம்பெறும் எந்த ஒரு தாக்குதலுக்கும் உடனடியாகவும் முழு அளவிலும் பதில் அளிப்பதற்கு ஈரானிய ஆயுதப் படைகள் தயாராக உள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.

தனது அணுத் திட்டம் அமைதியான நோக்கத்தைக் கொண்டது என்று தொடர்ந்து வலியுறுத்தி வரும் ஈரான், அந்த நாடு அணு ஆயுதம் தயாரிக்க முயற்சிப்பதாக அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் சுமத்தும் குற்றச்சாட்டையும் நிராகரித்து வருகிறது.

எனினும் ஈரானில் அண்மையில் இடம்பெற்ற அரச எதிர்ப்பு ஆர்ப்பட்டாம் மற்றும் அதற்கு டொனால்ட் டிரம்ப் ஆதரவு வெளியிட்டு வந்த நிலையிலேயே இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இந்த ஆர்ப்பாட்டக்காரர்களை ஊக்குவிக்கும் வகையில் ஈரான் பாதுகாப்புப் படைகள் மற்றும் அந்நாட்டு தலைவர்களை இலக்கு வைத்து அமெரிக்கா தாக்குதல்; நடத்துவதற்கான சாத்திங்கள் தொடர்பில் செய்திகள் வெளியாகியுள்ளன. எனினும் இது தொடர்பில் டிரம்ப் இன்னும் இறுதி முடிவுக்கு வரவில்லை என்று அமெரிக்க அரசுக்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள்காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே அமெரிக்காவின் விமானந்தாங்கி கப்பல் ஒன்று மற்றும் அதற்கு உதவியாக போர் கப்பல்கள் மத்திய கிழக்கிற்கு விரைந்துள்ளன. இதன்மூலம் மத்திய கிழக்கில் நிலைகொண்டிருக்கும் போர் கப்பல்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த மாத ஆரம்பத்தில் வெனிசுவேலா ஜனாதிபதி நகலஸ் மடுரோவை கைது செய்த நடவடிக்கையின்போது கரீமிபியன் கடற்பகுதியில் நிலைநிறுத்தப்பட்ட அமெரிக்க போர் கப்பல்களின் எண்ணிக்கைக்கு இது நிகராக உள்ளது.

வளைகுடா சென்றிருக்கும் விமானதாங்கி கப்பலான யு.எஸ்.எஸ். அப்ரஹாம் லிங்கனில் மூன்று நாசகார கப்பல்கள் மற்றும் எப்-35 போர் விமானங்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று அமெரிக்காவின் ஜோர்தான், கட்டார் மற்றும் இந்திய பெருங்கடலில் உள்ள டிகோ கார்சியா தளங்களில் போர் விமானங்களின் எண்ணிக்கையும் அண்மைய நாட்களில் அதிகரிக்கப்பட்டிருப்பதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

வெனிசுவேலா தலைவர் மடுரோவை பிடித்தபோது அனுப்பியதை விடவும் மிகப் பெரிய கப்பற்படை ஒன்று வளைகுடாவில் இருப்பதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். இந்தப் படை தேவைப்பட்டால், வேகத்துடனும் கடுமையாகவும் அதன் பணியை விரைவாக நிறைவேற்றத் தயாராக, இருப்பத்துடன், அதற்குறிய திறனுடன் உள்ளது என்று டிரம்ப் சமூக ஊடகத்தில் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

ட்ரூத் சோசியல் சமூக ஊடகத்தில் பதிவிட்ட டிரம்ப், ‘ஈரான் விரைவாக பேச்சுவார்த்தை மேசைக்கு வந்து நியாயமான மற்றும் சமநிலையான பேச்சுவார்த்தை ஒன்றில் ஈடுபடும் என்று எதிர்பார்க்கிறேன் என்பதோடு அணு ஆயுதத்திற்கு இடமில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் – இஸ்ரேல் இடையே 12 நாட்கள் நீடித்த மோதலின்போது கடந்த ஜூன் மாதத்தில் ஈரான் அணு நிலைகள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலை குறிப்பிட்டுக் கூறிய டிரம்ப், ‘அடுத்த தாக்குதல் மிக மோசமாக இருக்கும். மீண்டும் அவ்வாறு நடப்பதற்கு வாய்ப்பு அளிக்காதீர்கள்’ என்று எச்சரித்தார்.

ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் முஹமது பகர் கலிபஃப் சி.என்.என். தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, ‘அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஈரான் தயாராக உள்ளது, ஆனால் அந்தப் பேச்சுவார்த்தை உண்மையானதாக இருக்க வேண்டும்’ என்றார். ‘டிரம்பினால் போர் ஒன்றை ஆரம்பிக்க முடியுமாக இருக்கும், ஆனால் (அதனை எவ்வாறு முடிப்பது என்பது) அவரின் கட்டுப்பாட்டில் இருக்காது’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த போர் பதற்றத்திற்கு மத்தியில் ஈரான் வெளியுறவு அமைச்சர் அரக்சி இன்று (30) உத்தியோகபூர்வ விஜயமாக துருக்கி செல்லவுள்ளார். அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே துருக்கி மத்தியஸ்த முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக செய்திகள் வெளியான நிலையிலேயே அரக்சியின் இந்தப் பயணம் இடம்பெறவுள்ளது.