-ஐரோப்பாவிற்கான ஏற்றுமதி 6.76 வீதத்தினால் அதிகரிப்பு
நாட்டின் ஆடை ஏற்றுமதி வருமானம் கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் அதிகரித்துள்ளது. ஆடை சங்கங்களின் சம்மேளனம் (JAAF) வெளியிட்டுள்ள தரவுகளுக்கு அமைய டிசம்பர் மாதத்தில் ஏற்றுமதி வருமானமானது 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தை விட 23.03 மில்லியன் டொலர்களால் அதிகரிப்பைக் காட்டுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கு பிரதானமாக அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து கிடைத்த கேள்வியின் அதிகரிப்பே காரணம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இந்தக் கேள்வி அதிகரிப்புடன் டிசம்பர் மாதத்தில் அதிக இலாபத்தைப் பெற்றுக்கொள்ள இலங்கையினால் முடிந்துள்ளதாக தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
இந்தநிலையில், 2024 டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 2025 டிசம்பர் மாதத்தில் அமெரிக்காவிற்கான ஏற்றுமதி 6.49 வீதத்தினால் அதிகரித்துள்ளதுடன் அது 178.29 மில்லியன் டொலர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்தோடு, ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஏற்றுமதிகள் 6.76 வீதத்தினால்வளர்ச்சியடைந்து 141 மில்லியன் டொலர்களாகவும், ஐக்கிய இராச்சியத்திற்கான ஏற்றுமதிகள் 12.95 வீதத்தினால் அதிகரித்து 55.12 மில்லியன் டொலர் வருமானமாகவும் பதிவாகியுள்ளன. இந்தநிலையில், ஏனைய நாடுகளுக்கான ஏற்றுமதிகள் 4.06 வீதத்தால் குறைவடைந்துள்ளதுடன் அது 72.8 மில்லியன் டொலர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை 2025 ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான முழு ஆண்டில், மொத்த ஆடை மற்றும் துணி ஏற்றுமதி 5.02 பில்லியன் டொலர்களாகப் பதிவாகியுள்ளதென கூட்டு ஆடை சங்கங்களின் பேரவை தெரிவித்துள்ளது.


