இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அபார துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய நியூசிலாந்து துடுப்பாட்ட வீரர் டரில் மிட்சல் சர்வதேச கிரிக்கெட் கௌன்சிலின் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் இந்திய வீரர் விராட் கொஹ்லியை பின்தள்ளி முதல் இடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளார்.
மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் மிட்சல் இரண்டாவது மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டிகளில் ஆட்டமிழக்காது 131 மற்றும் 137 ஓட்டங்களை பெற்றதோடு இந்தத் தொடரில் அவர் தனது ஓட்ட சராசரியை 100இற்கு மேல் வைத்திருந்தார். இதன்மூலம் இந்திய மண்ணில் நியூசிலாந்து அணி முதல் முறையாக ஒருநாள் தொடர் ஒன்றை கைப்பற்றி இருந்தது.
இதனால் ஒருநாள் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் 845 புள்ளிகளை அதிகரித்துக் கொண்ட மிட்சல் கொஹ்லியை பின்தள்ளி முதல் இடத்திற்கு முன்னேறினார். கொஹ்லி 795 தரநிலைப் புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்கு சரிந்தார்.
எவ்வாறாயினும் கொஹ்லி நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் மூன்று இன்னிங்ஸ்களிலும் முறையே 93, 23 மற்றும் 124 ஓட்டங்களை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மிட்சல் ஒருநாள் துடுப்பாட்ட வீரர் தரவரிசையில் முதல் இடத்திற்கு முன்னேறுவது இது இரண்டாவது முறையாகும் இதற்கு முன்னர் கடந்த நவம்பரில் அவர் முதல் இடத்திற்கு முன்னேற்றம் கண்டபோதும் வெறும் மூன்று நாட்களுக்கே தனது இடத்தை தக்கவைக்க முடிந்ததோடு ரோஹித் ஷர்மா அவரை பின்தள்ளி இருந்தார்.
அதேபோன்று தரவரிசையில் மூன்றாவது இடத்தில் இருந்த ரோஹித் ஷர்மாவை பின்தள்ளி அப்கானிஸ்தானின் இப்ராஹிம் சத்ரான் அந்த இடத்தைப் பிடித்துள்ளார்.
புதுப்பிக்கப்பட்ட ஒருநாள் தரவரிசையில் இலங்கை வீரர்களில் அதிக தரநிலையாக சரித் அசலங்க 9 ஆவது இடத்தை தக்கவைத்திருப்பதோடு குசல் மெண்டிஸ் ஒரு இடம் முன்னேற்றம் கண்டு 15 ஆவது இடத்தைப் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


