இங்கிலாந்து கிரிக்கெட் தொடர்: கொழும்பில் விசேட போக்குவரத்து ஏற்பாடு

janu22

– வீதிகள் மூடப்படாத போதிலும் நெரிசலை தவிர்க்க உதவுமாறு வேண்டுகோள்

இலங்கைக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான போட்டிகளை முன்னிட்டு, கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தைச் சூழவுள்ள பகுதிகளில் விசேட போக்குவரத்து முகாமைத்துவ திட்டமொன்றைப் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

பின்வரும் திகதிகளில் கொழும்பில் போட்டிகள் நடைபெறவுள்ளன:
• 2026 ஜனவரி 22 (இன்று)
• 2026 ஜனவரி 24
• 2026 ஜனவரி 27

போக்குவரத்து அறிவுறுத்தல்கள்
மைதானத்தைச் சூழவுள்ள வீதிகளில் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக, மேற்படி நாட்களில் நண்பகல் 12.00 மணி முதல் போட்டி நிறைவடையும் வரை, மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு சாரதிகள் மற்றும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்தப் பகுதிகளில் உள்ள வீதிகள் எவையும் முழுமையாக மூடப்படமாட்டாது அல்லது போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படமாட்டாது. வழமையான வாகன நடமாட்டத்திற்காக வீதிகள் திறந்திருக்கும் எனினும், நெரிசலைத் தவிர்க்க மாற்று வழிகளை நாடுவது சிறந்தது எனப் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

வாகன நெரிசல் ஏற்படக்கூடிய வீதிகள்
குறித்த நேரத்தில் பின்வரும் வீதிகளைப் பயன்படுத்துவோர் அவதானத்துடன் செயற்படுமாறு கோரப்பட்டுள்ளனர்:
• பிரதீபா மாவத்தை
• சத்தர்ம மாவத்தை
• ஜயந்த வீரசேகர மாவத்தை
• பான்சலை வீதி (கெத்தாராம மாவத்தை)
• 100 அடி வீதி
• போதிராஜ மாவத்தை
• வின்சென்ட் பெரேரா மாவத்தை
• பிரிட்டோ பாபபுல்லே வீதி

கொழும்பு போக்குவரத்துப் பிரிவினால் வழங்கப்பட்டுள்ள இந்த ஆலோசனைகளைத் பின்பற்றி ஒத்துழைப்பு வழங்குமாறு பொலிஸ் ஊடகப் பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.