டி20 உலகக் கிண்ணத்தில் பங்களாதேஷ் அணி பங்கேற்பது தொடர்பில் முடிவு எடுப்பதற்கு ஐ.சி.சி. வழங்கிய கெடு இன்றுடன் (21) முடிவுக்கு வரும் நிலையில் பங்களாதேஷ் பங்கேற்காத பட்சத்தில் அதற்கு மாற்றாக ஸ்கொட்லாந்தை இணைப்பது தொடர்பில் ஐ.சி.சியினால் இன்னும் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது.
எனினும் உலகக் கிண்ணத்தில் பங்கேற்பதற்கு தயாராகவே இருப்பதாக ஸ்கொட்லாந்து குறிப்பிட்டுள்ளது.
பாதுகாப்பைக் காரணம் காட்டியே பங்களாதேஷ் அணி இந்தியாவில் ஆட மறுத்து வருகிறது. எதிர்வரும் பெப்ரவரி 7 ஆம் திகதி ஆரம்பமாகும் டி20 உலகக் கிண்ணத்தில் பங்களாதேஷ் தனது குழுநிலை போட்டிகள் அனைத்தையும் இந்தியாவிலேயே ஆடவுள்ளது.
தனது போட்டிகளை இலங்கைக்கு மாற்ற பங்களாதேஷ் தொடர்ந்து வலியுறுத்தி வந்தபோதும் ஐ.சி.சி. போட்டி அட்டவணையில் மாற்றம் செய்யாது இருக்கும் நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது.
இந்நிலையில் பங்களாதேஷ் அணி இந்தியா செல்ல மறுக்கும் பட்சத்தில் அது உலகக் கிண்ணத்தில் இருந்து விலகுவதாக அமையும். இதனால் ஐ.சி.சி. தரவரிசையில் அடுத்து முன்னிலையில் இருக்கும் ஸ்கொட்லாந்து அணிக்கு உலகக் கிண்ணத்தில் வாய்ப்புக் கிடைக்கும்.
எனினும் தற்போதைய கட்டத்தில் இது தொடர்பில் ஸ்கொட்லாந்து கிரிக்கெட் சபையை ஐ.சி.சி. இன்னும் அணுகவில்லை என்ற பி.பி.சி. செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த பருவத்தில் நடைபெற்ற 2026 டி20 உலகக் கிண்ணத்திற்கான ஐரோப்பிய பிராந்திய தகுதிகாண் சுற்றில் நான்காவது இடத்தைப் பிடித்ததாலேயே ஸ்கொட்லாந்து உலகக் கிண்ண வாய்ப்பை இழந்தது. அதற்கு பதில் பிராந்தியத்தில் இருந்து நெதர்லாந்து மற்றும் இத்தாலி அணிகள் உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற்றன.
ஸ்கொட்லாந்து எதிர்வரும் மார்ச்சில் நடைபெறவுள்ள நமீபிய மற்றும் ஓமான் அணிகளுக்கு எதிரான முக்கோண ஒருநாள் தொடரில் பங்கேற்பதற்காக தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இதற்கு முன் 2009 இல் இங்கிலாந்தில் நடந்த டி20 உலகக் கிண்ணத்தில் அரசியல் காரணத்திற்காக சிம்பப்வே விலகிய நிலையில் அதற்கு பதில் சிறந்த அணியாக இருந்த ஸ்கொட்லாந்துக்கே அந்த உலகக் கிண்ணத்தில் ஆட வாய்ப்பு கிடைத்தமை குறிப்பிடத்தக்கது. ஸ்கொட்லாந்து ஐ.சி.சி. டி20 தரவரிசையில் தற்போது 14 ஆவது இடத்தில் உள்ளது.


