சர்ச்சைக்குரிய தரம் 6 ஆங்கில பாடத்தொகுதி முழுமையாக சீல் வைக்கப்பட்டுள்ள நிலையில் அந்த விடயத்தை தூக்கிப்பிடித்து முழு கல்வி மறுசீரமைப்பு தொடர்பிலும் சந்தேகங்களை உருவாக்க முயற்சிக்க வேண்டாம் என கல்வியமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய சபையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவைக் கேட்டுக் கொண்டார்.
அது தொடர்பில் தவறான விடயங்களை வெளியிட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்ட பிரதமர், புதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் சகல தரப்பினருடனும் வெளிப்படையாக பேச்சு வார்த்தையை நடத்துவதற்கு தயாராகவே உள்ளதாகவும் உறுதியாகத் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று (07) புதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அது தொடர்பில் பிரதமர் மேலும் தெரிவிக்கையில்,
”கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் கல்வி ஆலோசனை சபையில் விரிவாக ஆராயப்பட்டது. பாராளுமன்றத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் கலந்து கொண்டு யோசனைகளை முன்வைத்தார்கள். அவ்வாறு முன்வைக்கப்படும் சிறந்த விடயங்களை நாம் ஏற்றுக்கொள்வோம் என்பதுடன் அது தொடர்பில் வெளிப்படையான பேச்சுவார்த்தையில் ஈடுபடவும் நாம் தயார்.
தரம் 6 ஆங்கில பாடப் புத்தகத்தில் முறையற்ற வகையில் உள்ளடக்கப்பட்ட சர்ச்சைக்குரிய விடயம் சம்பந்தமாக பல்வேறு மட்டத்தில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஓய்வு பெற்ற அரச நிர்வாக அதிகாரியான ரஞ்சித் ஆரியரத்னவின் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த பாடத்தொகுதி முழுமையாக சீல் செய்யப்பட்டுள்ளதுடன் பாடசாலைகளுக்கு அவை விநியோகிக்கப்படவில்லை. அத்துடன் அனைத்துத் தரப்பினருடனும் வெளிப்படையாக பேச்சுவார்த்தை நடத்த முடியும்” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.


