பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் மர்ம நபர்கள் மறைந்திருந்து நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பொலிஸார் கொல்லப்பட்டுள்ளனர் என்று மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைபர் பக்துன்குவா மாகாணத்தின், கராக் மாவட்டத்தில் அமைந்துள்ள தனியார் எரிசக்தி நிறுவனத்திற்கான பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸாரின் வாகனத்தின் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதைத் தொடர்ந்து இவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அத்தோடு அவர்கள் பயணித்த வாகனத்தையும் அந்த மர்ம நபர்கள் தீயிட்டுச் சென்றததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இத்தாக்குதலுக்கு எந்தவொரு தீவிரவாத அமைப்பும் உடனடியாக உரிமை கோரவில்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பலூசிஸ்தான் மற்றும் கைபர் பக்துன்குவா போன்ற மாகாணங்களில் பாதுகாப்புப் படையினர் மீது தீவிரவாதிகளின் தாக்குதல்கள் சமீபகாலமாக அதிகரித்துள்ளன.
இம்மாத முற்பகுதியில் டெரா இஸ்மாயில் பகுதியில் பொலிஸ் வாகனத்தின் மீது நடத்தப்பட்ட குண்டு தாக்குதலிலும் பொலிஸார் மூவர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


