டி20 சர்வதேச போட்டியில் ஒரே ஓவரில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என இந்தோனேசியாவின் கெடே பிரியந்தனா சாதனை படைத்துள்ளார்.
கம்போடியாவுக்கு எதிராக பாலியில் நேற்று (23) நடைபெற்ற போட்டியிலேயே அவர் இந்த சாதனையை படைத்துள்ளார். இதன்போது கம்போடிய அணி 168 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலெடுத்தாடியபோது 16 ஆவது ஓவரை வீசவந்த பிரியந்தனா முதல் மூன்று பந்துகளில் ஹட்ரிக் விக்கெட் வீழ்த்தினார். பின்னர் அந்த ஓவரின் கடைசி இரு பந்துகளுக்கும் மேலும் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன்மூலம் அவர் ஒரே ஓவரில் ஒரு ஓட்டத்தை மாத்திரம் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்தப் போட்டியில் இந்தோனேசிய அணி 60 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.
இதற்கு முன்னர் சர்வதேச டி20 போட்டிகளில் 14 தடவைகள் பந்துவீச்சாளர்கள் ஓவர் ஒன்றில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர். இதில் 2019 இல் நியூசிலாந்துக்கு எதிராக லசித் மாலிங்க நான்கு பந்துகளுக்கு நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியதும் அடங்கும்.


