அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பிஃபா உலகக் கிண்ண போட்டியில் சம்பியன் பட்டத்தை வெல்லும் அணி சாதனை தொகையான 50 மில்லியன் டொலர்களை வெல்லும் என சர்வதேச கால்பந்து சம்மேளனம் அறிவித்துள்ளது.
இந்தத் தொகை 2018 இல் வழங்கப்பட்ட 38 மில்லியன் டொலர் மற்றும் 2022 இல் வழங்கப்பட்ட 42 மில்லியன் டொலர் பரிசுத் தொகையில் இருந்து கணிசமான அதிகரிப்பாக உள்ளது. அத்துடன் எதிர்வரும் உலகக் கிண்ணத்திற்கான மொத்தப் பரிசுத் தொகை கட்டாரில் கடந்த முறை நடந்ததை விடவும் 50 வீதம் அதிகரிக்கப்பட்டு 655 மில்லியன் டொலர்களாக உயர்த்தப்பட்டுள்ளது.
எனினும் 2026 ஜூன் 11 தொடக்கம் ஜூலை 19 ஆம் திகதி வரை அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோவில் நடைபெறவுள்ள இந்த உலகக் கிண்ணத்தில் பங்கேற்கும் அணிகளும் 32 இல் இருந்து 48 ஆக உயர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதில் இரண்டாம் இடம் பிடிக்கும் அணி 33 மில்லியன் டொலர்களையும் மூன்று மற்றும் நான்காவது இடங்களை பிடிக்கும் அணிகள் முறையே 29 மற்றும் 27 மில்லியன் டொலர்களையும் வெல்லவுள்ளன. இதில் குறைந்தபட்ச பணப்பரிசு 9 மில்லியன் டொலர்களாகும்.
பங்கேற்கும் 48 அணிகளுக்கும் தயார்படுத்தல் செலவாக தலா 1.5 மில்லியன் டொலர்கள் வழங்கப்படுகின்றன.


