அதிக விலைக்கு நீர் போத்தல் விற்ற வணிக நிலையத்திற்கு ரூ. 5 இலட்சம் அபராதம்

11

நுவரெலியாவில் அதிக விலைக்கு நீர் போத்தல்களை விற்ற ஒரு வணிக நிலையத்திற்கு ரூ. 5 இலட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

நுவரெலியாவில் அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்ற ஒரு வணிக நிலையத்தில் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை சோதனைகளை நடத்தி வழக்கு தாக்கல் செய்திருந்தது.

அதன்படி, நேற்று (10) நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் மேற்படி வணிக நிலையத்திற்கு எதிரான வழக்கில், அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விற்பனை செய்யப்பட்டதை சந்தேகநபர் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, அவருக்கு ரூ. 5 இலட்சம் அபராதம் விதித்தது.

அத்துடன், உச்சபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு அரிசியை விற்றதற்காக 3 வர்த்தகர்களுக்கு தலா ரூ. 100,000 அபராதம் விதித்துள்ளது.

நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை தாக்கல் செய்திருந்த 14 சந்தேகநபர்கள் மீதான வழக்குகள் நேற்று விசாரிக்கப்பட்டதோடு, இதன்போது நீதிமன்றம் ரூ. 880,000 அபராதத்தை விதித்தது.

அனர்த்த நிலைமைகளின்போது நுகர்வோரை பாதுகாக்கும் திட்டத்தின் கீழ், நுவரெலியா மாவட்ட செயலாளர் திருமதி துஷாரி தென்னகோனின் அறிவுறுத்தலின் கீழ், பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் மத்திய மாகாண உதவி பணிப்பாளர் கே.ஏ. பிரதீப் களுஆராச்சியின் வழிகாட்டலின் கீழ், சிரேஷ்ட புலனாய்வு அதிகாரி அமில ரத்நாயக்கவின் வழிகாட்டலின் கீழ் இந்த சோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.

எஸ்.எம்.ரஸ்லான், எம். முத்துசிவானோ, டபிள்யூ.எம்.எச்.ஜி. காமினி, எச்.டி.டபிள்யூ.கே.எம்.ஆர்.பி. ஹபுஹின்ன, ஐ.என்.எம்.டி. கந்துவத்த, எம்.சி.டி. திசாநாயக்க ஆகியோர் சோதனைக்கான விசாரணை அதிகாரிகளாக செயற்பட்டிருந்தனர்.