நாட்டின் மின் சக்தித் துறையில் “பாதுகாப்பானமற்றும் நிலையான சக்தி” என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக உலக வங்கியின் சர்வதேச அபிவிருத்தி சங்கத்திடமிருந்து அரசாங்கம் 30 மில்லியன் டொலர்களைக் கடனாகப் பெற்றுக்கொண்டுள்ளது.
நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும மற்றும் உலக வங்கி குழுமத்தின் மாலைதீவு, நேபாளம் மற்றும் இலங்கைக்கான பிராந்திய பணிப்பாளர் டேவிட் என். சிஸ்லன்டேவிட் என். சிஸ்லென் ஆகியோர் இதற்கான உத்தியோகபூர்வ உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர்.
2030ஆம் ஆண்டுக்குள் நாட்டுக்கான 70 சதவீத மின்சாரத்தை புதுப்பிக்கத்தக்க மூலங்களிலிருந்து உற்பத்தி செய்ய வேண்டும் என்ற அரசாங்கத்தின் இலக்குக்கு இணங்க புதுப்பிக்கத்தக்க வலுசக்தியை மின் கட்டமைப்பில் இணைப்பதற்கான உட் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தப் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மாற்றத்தில் தனியார் துறையின் முதலீடுகளை அதிகரிக்க உலக வங்கி கட்டண உத்தரவாத வசதியையும் வழங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
மேற்படி திட்டத்துக்கான செலவான சுமார் 60 மில்லியன் அமெரிக்க டொலர்களில், முதல் கட்டமாக 30 மில்லியன் டொலர்களை உலக வங்கி வழங்குகிறது.
இந்தத் திட்டம் வலுசக்தி அமைச்சு போன்ற தொடர்புடைய நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து இலங்கை மின்சார சபையினால் செயற்படுத்தப்படும் என்றும் நிதியமைச்சு குறிப்பிட்டுள்ளது.


