இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டிய நியூசிலாந்து அணி மூன்று போட்டிகளைக் கொண்ட தொடரை 2–0 என வென்றது.
ஹமில்டனில் நேற்று (29) நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட இங்கிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்ததை அடுத்து 36 ஓவர்களில் 175 ஓட்டங்களுக்கே சுருண்டது. பந்துவீச்சில் பிளாயர் டிக்னர் 4 விக்கெட்டுகளை பதம்பார்த்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பதிலெடுத்தாடிய நியூசிலாந்து அணி ஓட்டப் பெறும் முன்னரே முதல் விக்கெட்டை இழந்தபோதும் மறுமுனை ஆரம்ப வீரரான ரச்சின் ரவிந்திரா (54) மற்றும் டரில் மிட்சல் (ஆட்டமிழக்காது 56) அரைச் சதம் பெற்று வெற்றியை உறுதி செய்தனர். இதன்மூலம் நியூசிலாந்து அணி 33.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 177 ஓட்டங்களைப் பெற்றது.
இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வெளிங்டனில் எதிர்வரும் சனிக்கிழமை (01) நடைபெறவுள்ளது.

