மகளிர் உலகக் கிண்ணப் போட்டியில் இதுவரை ஒரு வெற்றியைக் கூட பெறாத இலங்கை அணி கட்டாய வெற்றி ஒன்றை எதிர்பார்த்து இன்று தென்னாபிரிக்க அணியை கொழும்பு, ஆர். பிரேமதாச மைதானத்தில் எதிர்கொள்ளவுள்ளது.
இலங்கை மகளிர்கள் தனது பெரும்பாலான ஆரம்பச் சுற்றுப் போட்டிகளை சொந்த மண்ணில் ஆடுகின்றபோதும் இலங்கையில் தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலை அதற்கு பாதகமாக மாறியுள்ளது. ஆரம்ப சுற்றில் இலங்கை இதுவரை ஆடிய நான்கு போட்டிகளில் இரண்டு ஆட்டங்கள் மழையால் கைவிடப்பட்டன. இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான மற்ற இரு போட்டிகளிலும் இலங்கை அணி தோல்வியை சந்தித்தது.இந்நிலையில் இரண்டு புள்ளிகளைப் பெற்றிருக்கும் இலங்கை அணி புள்ளிப்பட்டியலில் தற்போது 7 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ரவுண்ட் ரொபின் அடிப்படையில் நடைபெறும் ஆரம்ப சுற்றில் இலங்கைக்கு இன்னும் மூன்று போட்டிகள் எஞ்சி இருக்கும் நிலையில் அரையிறுதிக்கு முன்னேறுவதற்கு அந்த மூன்று போட்டிகளிலும் கட்டாயம் வெற்றி பெற வேண்டும்.
கடைசியாக நடந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி நியூசிலாந்துக்கு 259 ஓட்டங்கள் என்ற சவாலான வெற்றி இலக்கை நிர்ணயித்த நிலையிலேயே அந்தப் போட்டிக்கு மழையால் இடையூறு ஏற்பட்டது. இந்நிலையில் கொழும்பில், குறிப்பாக மலை நேரத்தில் பெய்து வரும் மழை பகலிரவு ஆட்டமாக இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகும் போட்டியில் பாதிப்பை ஏற்படுத்துவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வரும் மகளிர் உலகக் கிண்ணப் போட்டியில் இதுவரை கொழும்பில் நடந்த ஆறு ஆட்டங்களில் மூன்று போட்டிகள் மழையால் கைவிடப்பட்டுள்ளன. இதனால் இன்றைய போட்டிக்கும் மழை இடையூறு செய்தால் இலங்கை மகளிர் அணி அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை நழுவவிடுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிடும். அதற்கு அப்பால் தென்னாபிரிக்க மகளிர் இம்முறை உலகக் கிண்ணத்தில் சிறப்பாக செயற்பட்டு வருவதோடு அந்த அணி இதுவரை ஆடிய 4 போட்டிகளில் 3 வெற்றி ஒரு தோல்வியுடன் புள்ளிப் பட்டியலில் இங்கிலாந்து (07), அவுஸ்திரேலியாவுக்கு (7) அடுத்து 6 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. எனவே, தென்னாபிரிக்காவை எதிர்கொள்வது இலங்கை அணிக்கு பெரும் சவாலாக இருக்கும்.
கடந்த போட்டியில் இலங்கை அணியின் துடுப்பாட்ட சிறப்பாக இருந்து. அணித் தலைவி சமரி அத்தபத்துவுடன் மத்திய வரிசையில் நிலக்ஷிகா சில்வா அதிரடி அரைச் சதம் ஒன்றை பெற்றார். ஆரம்ப விக்கெட்டுக்கு சமரி அத்தபத்து மற்றும் விஷ்மி குணரத்ன இருவரும் 101 ஓட்டங்களை பெற்றிருந்தனர். இதுவெல்லாம் இன்றைய போட்டியில் தென்னாபிரிக்காவை எதிர்கொள்வதற்கு இலங்கை அணிக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக விஷ்மி குணரத்ன அண்மைக் காலமாக சோபிக்கத் தவறிய நிலையில் கடந்த ஆறு மாதங்களாக நான்காவது வரிசையில் களமிறக்கப்பட்டிருந்தார். எனினும் மீண்டும் அவர் ஆரம்ப வரிசையில் களமிறங்கி சோபித்துள்ளார்.அதேபோன்று பந்துவீச்சு வரிசையை கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டால் இன்றை ஆட்டத்தில் தென்னாபிரிக்க அணிக்கு சவால் கொடுக்கு வாய்ப்பு ஏற்படும்.
ஒருநாள் சர்வதேச போட்டிகளில் இலங்கை மகளிர் அணி தென்னாபிரிக்காவை இதுவரை 25 முறை சந்தித்திருப்பதோடு அதில் ஆறு போட்டிகளிலேயே இலங்கை அணியால் வெல்ல முடிந்துள்ளது. 16 போட்டிகளில் தென்னாபிரிக்காவுக்கு வெற்றி கிடைத்துள்ளது. எனினும் கடைசியாக ஆடிய மூன்று போட்டிகளில் இரண்டு ஆட்டங்களை இலங்கை அணியால் வெல்ல முடிந்திருப்பது குறிப்பிடத்தக்கது.


