உலக சுகாதார அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு

1 9

தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) 78வது பிராந்திய மாநாட்டின் மூன்று நாள் அமர்வு இலங்கையில் வெற்றிகரமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் அங்கத்துவ நாடுகளின் சுகாதார அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் சர்வதேச சுகாதார அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்று, பிராந்திய சுகாதார வளர்ச்சி, தடுப்பூசித் திட்டங்கள், நோய்த் தடுப்பு நடவடிக்கைகள், மற்றும் மருத்துவ தொழில்நுட்ப மேம்பாடு குறித்த முக்கியமான கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளனர்.

இம் மாநாட்டில் பங்கேற்க இலங்கை வந்திருந்த வெளிநாட்டு பிரதிநிதிகள், எமது நாட்டின் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜெயதிஸ்ஸ மற்றும் பிரதியமைச்சர் வைத்தியர் ஹன்சகா விஜேமுனி ஆகியோரையும் தனித்தனியாக சந்தித்து முக்கியமான ஆலோசனைகளை மேற்கொண்டனர். குறிப்பாக, தடுப்பூசிகள் மற்றும் நோய்த்தடுப்புக்கான உலகளாவிய கூட்டணியின் (GAVI) தலைமை அதிகாரி தபானி மபோசா, மாலைதீவு சுகாதார அமைச்சர் அப்துல்லா நாஜிம் இப்ராஹிம், மற்றும் தாய்லாந்தின் பொது சுகாதார அமைச்சர் பட்டானா ப்ரோம்ஃபாட் ஆகியோர் இலங்கை சுகாதார அமைச்சருடன் கலந்துரையாடினர்.

இந்த சந்திப்புகளில் பிராந்தியத்திற்கே உரிய சுகாதார சவால்கள், குறிப்பாக தொற்றுநோய்களுக்கான தடுப்பு, குழந்தைகள் மற்றும் தாய்மார் சுகாதாரம், தடுப்பூசி விநியோக அமைப்பு மற்றும் அவசர சுகாதார பதில் நடவடிக்கைகள் போன்ற அம்சங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டன. இதனுடன், GAVI அமைப்பு, இலங்கையில் தடுப்பூசி வழங்கும் செயல்முறையை மேலும் வலுப்படுத்துவதற்கும், தொலைதூர பகுதிகளில் சுகாதார சேவைகளை மேம்படுத்துவதற்கும் தொழில்நுட்ப மற்றும் நிதி ஆதரவுகளை வழங்கும் உறுதிமொழியை தெரிவித்துள்ளது. மேலும், தாய்லாந்து சுகாதார அமைச்சர் பட்டானா ப்ரோம்ஃபாட் , மற்றும் மாலத்தீவு சுகாதார அமைச்சர் அப்துல்லா நாஜிம் இப்ராஹிம் ஆகியோர் இணைந்து, இலங்கையின் பிரதி சுகாதார அமைச்சர் வைத்தியர் ஹன்சகா விஜேமுனியை சந்தித்து இருதரப்பு சுகாதார ஒத்துழைப்புகளைப் பற்றிய சிறப்பு உரையாடல்களில் ஈடுபட்டனர்.

இலங்கையில் நடைமுறையில் உள்ள இலவச சுகாதார சேவை முறைமை, பிராந்திய நாடுகளிடையே சிறந்த முன்மாதிரியாக விளங்குவதாக வெளிநாட்டு பிரதிநிதிகள் பாராட்டினர். குறைந்த பொருளாதார வளங்களுடனும் உயர்தர மருத்துவ சேவைகளை வழங்கும் இலங்கையின் திறமைக்கு அவர்கள் வியப்பும் பாராட்டும் தெரிவித்தனர்.

சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ, நாட்டில் சுகாதார உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், நவீன மருத்துவ தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதற்கும் அரசாங்கம் முன்னெடுத்து வரும் திட்டங்களை விரிவாக விளக்கினார். தொலைதூர கிராமப்புற மருத்துவமனைகள் வரை தொலைவழி மருத்துவ சேவைகளை (tele medicine) விரிவாக்கம் செய்வது, நவீன பரிசோதனை மையங்களை உருவாக்குவது மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு மேம்பட்ட பயிற்சிகள் வழங்குவது போன்ற நடவடிக்கைகள் இத்திட்டங்களில் இடம்பெறுகின்றன.

வெளிநாட்டு பிரதிநிதிகள் இலங்கையுடன் நீடித்த நட்பு உறவை வலியுறுத்தி, நாட்டின் சுகாதார முன்னேற்றத்துக்காக தேவையான ஒத்துழைப்புகளை எதிர்காலத்திலும் வழங்குவதாக உறுதியளித்தனர்.

இம்மாநாட்டில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்கவும் பங்கேற்று, இலங்கையின் சுகாதார சேவைகளின் தற்போதைய நிலைமை மற்றும் எதிர்கால வளர்ச்சி நோக்கங்களை விளக்கினார்.

இந்த 78ஆவது பிராந்திய மாநாடு, பிராந்திய நாடுகளின் ஒற்றுமையை வலுப்படுத்தி, சுகாதார துறையில் புதிய ஒத்துழைப்பு வாய்ப்புகளுக்கான பாதையைத் திறந்துவைத்த முக்கிய நிகழ்வாக அமைந்துள்ளது.

2 5