மகத்தான வரவேற்பும் கௌரவிப்பும்அம்பாறை மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராகப் பதவியேற்றுள்ள திரு. அனுபம மங்கள விக்ரமாராச்சி அவர்களை வரவேற்று கௌரவிக்கும் விஷேட நிகழ்வு, கல்முனை முஹ்யித்தீன் ஜுமுஆ பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையினரின் ஏற்பாட்டில் கடந்த வியாழக் கிழமை பள்ளிவாசலில் நடைபெற்றது..

img 20260427 wa0004

நம்பிக்கையாளர் சபையின் தலைவர் அல்-ஹாஜ் எம். ஐ. அப்துல் அஸீஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாவட்ட மற்றும் பிரதேச மட்டத்திலான முக்கிய அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.சிறப்பு விருந்தினர்களாக கல்முனை பிரதேச செயலாளர் அஷ்-ஷேக் டி. எம். எம். அன்சார், கல்முனை மாநகர ஆணையாளர் ஏ. டி. எம். ராபி, ஓய்வுபெற்ற முன்னாள் கல்முனை பிரதேச செயலாளர் ஏ. எம். நஸீர் மற்றும் பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ. எல். ஏ. மஜீத் ஆகியோர் பங்கேற்றனர்.

மேலும், முஹம்மதிய்யா ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் அல்-ஹாஜ் முஹம்மது சமத், அஹ்லுஸ் ஸுன்னாஹ் வல் ஜமாஅத் தலைவர் மௌலவி பி. எம். எம். ஜலீல் பாகவி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் கல்முனைக் கிளைத் தலைவர் மௌலவி ஏ. எல். எம். முர்ஸித் முப்தி உள்ளிட்ட உலமாக்கள், அனைத்துப் பள்ளிவாசல்களின் தலைவர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் ஜமாஅத்தார்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டு அரசாங்க அதிபரை வரவேற்று கெளரவித்தனர்.

புதிய அரசாங்க அதிபருக்கு கல்முனை மக்களின் சார்பில் கௌரவப் பொன்னாடை போர்த்தப்பட்டதுடன், அவரது எதிர்கால நிர்வாகப் பணிகள் சிறக்க வாழ்த்தி, தூய நல்லெண்ணத்தின் அடையாளமாக விசேட நினைவுச்சின்னம் ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டது.

மக்களின் வரவேற்பை நெகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்ட அரசாங்க அதிபர் திரு. அனுபம மங்கள விக்ரமாராச்சி அவர்கள் உரையாற்றுகையில்:“பன்முகத்தன்மை கொண்ட அம்பாறை மாவட்டத்தில், அனைத்து சமூகங்களினதும் அபிலாஷைகளை உணர்ந்து, எவ்வித பாரபட்சமுமின்றி நேர்மையான சேவையை வழங்குவதே எனது முதன்மையான இலக்காகும். கல்முனை மக்கள் இன்று எனக்கு வழங்கிய இந்த அன்பான வரவேற்பு, எனது கடமைகளை இன்னும் அர்ப்பணிப்புடன் முன்னெடுக்க ஊக்கமளிக்கிறது” எனத் தெரிவித்தார்.நிகழ்வின் நிறைவாக, புதிய அரசாங்க அதிபரின் வழிகாட்டலில் மாவட்டம் சுபிட்சமடையவும், அபிவிருத்திகள் தடையின்றி மக்களைச் சென்றடையவும் வேண்டி விசேட துஆப் பிரார்த்தனை இடம்பெற்றது.

இப்பிரார்த்தனையினை நம்பிக்கையாளர் சபையின் பிரதித் தலைவர் மௌலவி ஏ. ஆர். சபா முஹம்மத் அவர்கள் நிகழ்த்தினார்.மாவட்ட நிர்வாகத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்தும் ஒரு பாலமாக அமைந்த இந்நிகழ்வு, கல்முனைப் பிராந்தியத்தின் சமூக ஒருமைப்பாட்டைப் பறைசாற்றும் வகையில் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது