ஐபிஎல் தொடர்களில் சேசிங் கிங்ஸ் ஆன பஞ்சாப் கிங்ஸ்!

a4

சென்னை சேப்பாக்கத்திலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இன்னொரு கிங்ஸ் அணியான பஞ்சாப் கிங்ஸ் பந்தாடியுள்ளது. குறிப்பாக சேசிங்கில் ஐபிஎல் தொடர்களில் பஞ்சாப் அணியே கிங் ஆகத் திகழ்கிறது.

நேற்றைய வெற்றியுடன் சேர்த்து 9ஆவது முறையாக 200+ இலக்கை வெற்றிகரமாக விரட்டி விரட்டல் கிங்ஸ் ஆகியுள்ளது பஞ்சாப் கிங்ஸ். பிரியவன்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங், ஸ்ரேயஸ் அய்யர் இணைந்து சென்னை சூப்பர் கிங்ஸ் பந்து வீச்சை ஒன்றுமில்லாமல் செய்தனர். பஞ்சாப் அணியின் முதல் 50 ஓட்டங்கள் 4 ஓவர்களில் வந்த போது பிரியவன்ஷ் ஆர்யா 9 பந்துகளில் 33 என்று காட்டடி தர்பார் நடத்திக் கொண்டிருந்தார்.

அப்போது 5 பந்துகளில் 4 ஓட்டங்களில் இருந்த அய்யர் பிறகு 26 பந்துகளில் அரைசதம் விளாசினார். 209 ஓட்டங்கள் இந்தப் பிட்சில் போதாமல் போனதற்குக் காரணம் மொத்தம் இன்னிங்சிற்கு 120 பந்துகளில் 40 பந்துகளை டாட் பாலாக்கி விட்டது சிஎஸ்கே. மாறாக பஞ்சாப் கிங்ஸ் அணி 34 பந்துகளையே டாட் பாலாக்கியது. சிஎஸ்கேவுக்குச் சாதகமான பிட்ச்தான். மட்டையை நேராக பந்தின் மீது செலுத்தி தூக்கி அடிக்கும் பிட்ச்தான்.

ஆனால் தனது பலத்தின் மடியிலேயே சிஎஸ்கே தோற்றது நிச்சயம் அவ்வணி நிர்வாகத்திற்கும் ருதுராஜ் கெய்க்வாடுக்கும் பெரிய தலைவலியே. எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் தொடர்ச்சியாக 4 ஆவது வெற்றியை சிஎஸ்கேவுக்கு எதிராகப் பெற்றுள்ளது பஞ்சாப் கிங்ஸ். சிஎஸ்கே அணியில் சாம்சன் மந்தமாக மாத்ரே வெளுத்து வாங்கினார்.

ஆயுஷ் மாத்ரே முதல் போட்டியில் அருமையான பவுன்சரில் ஹூக் மாட்டாமல் கிளவ்வில் பட்டு கேட்ச் ஆனார். அதன் பிறகே மைக் ஹஸ்ஸி அவருக்கு ஷாட் பாலை ஆடும் பயிற்சி அளித்தார், அது நேற்று பயனளித்தது, இரண்டு ஃபுல் பந்துகளை நேராகத் தூக்கி அடித்த பிறகே ஷார்ட் பிட்ச் பந்தை விரைவில் திரும்பி புல்ஷாட் பறக்க விட்டது மாத்ரே விரைவில் கற்றுக் கொள்ளும் ஒரு சிறந்த மாணவர் என்பது தெரிந்தது.

43 பந்துகளில் மாத்ரே 6 நான்குகள் 5 ஆறுகள் என்று கலக்கி ஆட்டமிழந்த தருணத்தில்தான் சிஎஸ்கே 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது. சிஎஸ்கே 200 ஓட்டங்களை எட்டுவது சிரமம் என்றே புரொஜெக்‌ஷன்கள் காட்டின. அதாவது 185 ஓட்டங்களைத்தான் சிஎஸ்கே எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மாற்றியவர் சர்பராஸ் கான்.