மாலைதீவு அணிக்கு எதிராக இலங்கைக்கு அதிரடி வெற்றி

m25

தெற்காசிய கால்பந்து சம்மேளனத்தின் 20 வயதுக்கு உட்பட்ட சாஃப் சம்பியன்சிப் தொடரில் போட்டியை நடத்தும் மலைதீவுக்கு எதிராக இலங்கை இளையோர் முதல் குழுநிலைப் போட்டியில் 3–2 என்ற கோல் கணக்கில் அதிரடி வெற்றியை பெற்றனர்.

மாலே தேசிய கால்பந்து அரங்கில் நேற்றுமுன்தினம் (23) நடைபெற்ற போட்டியில் மாலைதீவு 19 வயதுக்கு உட்பட்ட அணி ஆரம்பத்தில் முழு ஆதிக்கம் செலுத்தியது. இலங்கை கோல் கம்பத்தை அடிக்கடி ஆக்கிரமித்த அந்த அணி 28 ஆவது நிமிடத்தில் முதல் கோலை பெற்றது.

இந்நிலையில் இலங்கை அணியின் தற்காப்பில் ஏற்பட்ட தவறை பயன்படுத்தி 45 ஆவது நிடத்தில் மேலும் ஒரு கோலை பெற்ற மாலைதீவு முதல் பாதியில் 2–0 என முன்னிலை பெற்றது.

என்றபோதும் இரண்டாவது பாதியில் இலங்கை வீரர்கள் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 48 ஆவது நிமிடத்தில் வைத்து மொஹமட் காதிம் தொலைவில் இருந்து பந்தை உயர அடித்து இலங்கை அணிக்கு முதல் கோலை பெற்றுக்கொடுத்தார். இந்நிலையில் 63 ஆவது நிமிடத்தில் மொஹமட் ஹிஜாஸி எதிரணியின் தற்காப்பை முறியடித்து கோல் நிலையை சமன் செய்தார்.

இறுதி நேர பரபரப்புக்கு மத்தியில் 86 ஆவது நிமிடத்தில் வைத்து பெனால்டி பெட்டிக்குள் மாலைதீவு கோல் காப்பாளர் இழைத்த தவறால் இலங்கை அணிக்கு தீர்க்கமான பெனால்டி வாய்ப்பு ஒன்று கிடைத்தது. அந்த ‘ஸ்பொட் கிக்’ வாய்ப்பைப் பெற்ற இலங்கை இளையோர் அணித் தலைவர் ஹுஸைன் அப்துல்லா அதனை வெற்றி கோலாக மாற்றினார்.

இலங்கை இளையோர் அணி மாலைதீவு இளையோருக்கு எதிராக கடந்த 24 ஆண்டுகளில் பெரும் முதல் வெற்றியாக இது இருந்தது. இதற்கு முன்னர் 2002 இல் பாகிஸ்தானில் நடந்த ஆசிய இளையோர் சம்பியன்சிப் தகுதிகாண் போட்டியில் இலங்கை இளையோர் அணி மாலைதீவை 3–0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

சாஹிரா கல்லூரி மற்றும் பொலிஸ் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த அப்துல்லா தீர்க்கமான இந்த கோலை பெற்றதன் மூலம் போட்டியின் ஆட்ட நாயகன் விருதையும் வென்றார்.

இந்த வெற்றியுடன் இலங்கை இளையோர் அணி 20 வயதுக்கு உட்பட்ட சாஃப் சம்பியன்சிப் தொடரின் ஏ குழுவில் 3 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. ஏ குழுவுக்காக நேற்று முன்தினம் நடைபெற்ற மற்றொரு போட்டியில் பூட்டான் அணியை நோபாளம் 2–1 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியது.

இலங்கை இளையோர் அணி அடுத்து தனது இரண்டாவது குழுநிலைப் போட்டியில் இன்று (25) வலுவான நேபாள அணியை எதிர்கொள்ளவுள்ளது. அரையிறுதிக்கு முன்னேறும் அணியை தீர்மானிப்பதில் இந்தப் போட்டி முக்கியமானதாக அமையும்.