மத்திய கிழக்கில் தொடரும் போரினால் வான் பரப்புகள் மூடப்பட்டு விமானப் பயணங்களில் குழப்பம் நிலவும் சூழலில் டி20 உலகக் கிண்ணத்தில் ஆட இந்தியா வந்த மேற்கிந்திய தீவுகள் மற்றும் சிம்பாப்வே அணிகள் சொந்த நாட்டுக்கு திரும்ப முடியாமல் நிர்க்கதியாகியுள்ளன. இந்த இரு அணிகளும் கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிவுற்ற சுப்பர் எட்டு சுற்றுடன் உலகக் கிண்ணத்தில் இருந்து வெளியேறிய நிலையில் இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு இராச்சியம் வழியாக சொந்த நாடுகளுக்கு திரும்ப திட்டமிட்டிருந்தன. எனினும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் வளைகுடா நாடுகள் மீது தாக்குதல் நடத்தி வருவதால் ஆயிரக்கணக்கான விமானப் பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. சிம்பாப்வே அணி இந்தியாவில் பாதுகாப்பாக இருப்பதாக அந்நாட்டு கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. மறுபுறம் அணியினர் பாதுகாப்பான வழியில் நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாக மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபை குறிப்பிட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கௌன்சிலின் தலைமையகம் ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாய் நகரில் இருப்பதோடு அங்கு இடம்பெறும் தாக்குதல்களில் விமானநிலையமும் பாதிக்கப்பட்டுள்ளது.


