தென்னாபிரிக்காவின் ஆதிக்கத்தின் முன் அரையிறுதியில் நியூசி. இன்று களத்தில்

ma4

டி20 உலகக் கிண்ணத்தின் முதல் அரையிறுதிப் போட்டியில் தென்னாபிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

இம்முறை டி20 உலகக் கிண்ணத்தில் ஆதிக்கம் செலுத்தி வரும் தென்னாபிரிக்க அணி ஒரே தோல்வியுறாத அணியாகவே அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. தென்னாபிரிக்க அணியின் அதிரடி துடுப்பாட்டம் மற்றும் நேர்த்தியான பந்துவீச்சு அந்த அணிக்கு தொடர்ந்து வெற்றிகளைத் தேடித் தந்துள்ளது.

ஏற்கனவே இந்தத் தொடரில் ஆரம்ப சுற்றில் நியூசிலாந்து அணியை 7 விக்கெட்டுகளால் இலகுவாக வீழ்த்திய நிலையிலேயே அந்த அணியை இன்று இறுதிப் போட்டிக்காக மீண்டும் ஒருமுறை எதிர்கொள்ளவுள்ளது. அணித் தலைவர் அடம் மாக்ரம் துடுப்பாட்டத்தில் தொடர்ந்து சோபித்து வருவதோடு குவின்டன் டி கொக், டேவிட் மில்லர் போன்ற வீரர்களின் அதிரடி ஆட்டம் எதிரணிக்கு எப்போது சவாலாக இருந்து வருகிறது.

பந்துவீச்சில் லுங்கி நிகிடி இந்தத் தொடரில் இதுவரை 12 விக்கெட்டுகளை வீழ்த்தி முன்னிலை பெற்றிருப்பதோடு ககிசோ ரபாடா, கேஷவ் மகராஜ் போன்றவர்கள் அந்த அணிக்கு பந்துவீச்சில் பலம் சேர்க்கின்றனர்.

நியூசிலாந்து அணி தடுமாற்றத்துடனேயே அரையிறுதி வரை முன்னேறியுள்ளது. சுப்பர் 8 சுற்றில் அந்த அணி கடைசியாக ஆடிய இங்கிலாந்திடம் தோல்வியுற்றதோடு ரன் ரேட் அடிப்படையில் பாகிஸ்தானை பின்தள்ளியே அரையிறுதி வரை முன்னேறியது.

எனினும் இந்த உலகக் கிண்ணத்திற்கு முன்னர் நியூசிலாந்து அணி கடைசியாக தென்னாபிரிக்காவை எதிர்கொண்ட மூன்று போட்டிகளிலும் தொடர்ச்சியாக வெற்றியீட்டியுள்ளது. டிம் செய்பர்ட், பின் அலன், ரச்சின் ரவிந்திரா, கிளன் பில் போன்ற டி20 துடுப்பாட்டத்திற்கு வலுச்சேர்க்கும் துடுப்பாட்ட வரிசையை கொண்டிருக்கும் நியூசிலாந்து துணைக்கண்ட ஆடுகளத்திற்கு பொருந்தும் சுழல் வீரர்களையும் பெற்றுள்ளது.

இதனால் இன்றைய தினம் தென்னாபிரிக்க அணிக்கு சவால் விடுக்க பொருத்தமான அணி ஒன்றுடனேயே நியூசிலாந்து களமிறக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

இந்த இரு அணிகளும் இதுவரை ஆடிய 19 டி20 சர்வதேச போட்டிகளில் தென்னாபிரிக்கா 12 ஆட்டங்களில் வென்றிருப்பதோடு நியூசிலாந்து 7 போட்டிகளில் வென்றுள்ளது.

எனினும் ஐ.சி.சி. டி20 உலகக் கிண்ண போட்டியில் நியூசிலாந்து அணியால் தென்னாபிரிக்காவை இதுவரை வீழ்த்த முடியாமல் போயுள்ளது. இரு அணிகளும் உலகக் கிண்ணத்தில் ஆடிய 5 போட்டிகளிலும் தென்னாபிரிக்க அணியே வென்றுள்ளது.

இன்றைய போட்டிக்கு மழையால் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு குறைவாக இருந்தபோதும் அரையிறுதிக்கு மேலதிக நாள் ஒதுக்கப்பட்டிருப்பதால் போட்டி தடைப்பட்டால் தடைப்பட்ட இடத்தில் இருந்து அடுத்த நாளான மார்ச் 5 ஆம் திகதி போட்டி நடத்தப்படும்.

ஈடன் கார்டன் ஆடுகளம் துடுப்பாட்டத்திற்கு சாதகமாக இருப்பதோடு இங்கு சராசரி ஓட்டங்கள் 182 ஆகும். இங்கு அண்மைக் காலத்தில் வேகப்பந்துக்கு சாதகமான சூழல் இருப்பதோடு பந்து அதிகம் மேலெழுந்து வரும் தன்மை உள்ளது.

இந்த இரு அணிகளுமே இதுவரை உலகக் கிண்ணத்தை வெல்லாத நிலையில் இறுதிப் போட்டிக்கு முன்னேற முயற்சிக்கும் அதேநேரம் தென்னாபிரிக்க அணி தொடர்ந்து இரண்டாவது முறையாகவே இறுதிப் போட்டிக்கு முன்னேற எதிர்பார்த்துள்ளது.