இலங்கை மீனவர்கள் மீது எந்தவிதமான தாக்குதல்களும் மேற்கொள்ளப்படவில்லை

10 fishermen arrested
– இந்திய உயர் ஸ்தானிகராலயம் விளக்கம்

கடந்த ஜனவரி மாதம் கடலில் இலங்கை மீனவர்கள் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவங்கள் தொடர்பில் கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் தனது உத்தியோகபூர்வ விளக்கத்தை அளித்துள்ளது.

2026 ஜனவரி 29 ஆம் திகதி இலங்கை மீனவர்கள் கடலில் தாக்கப்பட்டதாக வெளியான செய்திகள் குறித்து ஊடகங்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வகையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. குறித்த தாக்குதல்கள் இந்தியப் பிரஜைகளால் மேற்கொள்ளப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இந்திய கடற்படையின் தொடர்பு மறுப்பு இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் ஊடகப் பேச்சாளர், “இந்திய கடற்படையினராலோ அல்லது இந்திய கரையோரக் காவல் படையினராலோ அவ்வாறான எந்தவிதமான தாக்குதல்களும் மேற்கொள்ளப்படவில்லை” என்பதை மிக உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

மனிதாபிமான அணுகுமுறை மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் தொடர்பில் இந்தியா கொண்டுள்ள நிலைப்பாட்டை இந்த அறிக்கை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. குறிப்பாக, மீனவர் விவகாரங்களில் மனிதாபிமான அணுகுமுறை கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பதையும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பலத்தைப் பயன்படுத்தக் கூடாது என்பதையும் இந்தியா தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றது.

இவ்வாறான விடயங்கள் குறித்து இந்தியத் தரப்பு இலங்கை அரசாங்கத்துடன் தொடர்ச்சியான தொடர்புகளைப் பேணி வருவதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.