அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு: விமான சேவைகள், மின்விநியோகம் பாதிப்பு

j26

ஐக்கிய அமெரிக்காவில் நிலவும் கடும் பனிப் பொழிவு மற்றும் குளிர்காலப் புயல் காரணமாக இரண்டு இலட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாவனையாளர்களுக்கு மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.

இப்பனிப்பொழிவு காரணமாக நேற்று ஞாயிற்றுக்கிழமை திட்டமிடப்பட்டிருந்த 9,400க்கும் மேற்பட்ட அமெரிக்க விமானங்களின் சேவைகள் இரத்து செய்யப்பட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

இந்நிலையில் வானிலை அறிவிப்பாளர்கள், பனி, பனிப்பொழிவு, உறைபனி மழை மற்றும் ஆபத்தான குளிர் வெப்பநிலை காரணமாக நேற்று முதல் இவ்வாரத்தில் நாட்டின் கிழக்கின் மூன்றில் இரண்டு பங்கை பாதிக்கும் என்று கூறியுள்ளனர்.

இதேவேளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தென் கரோலினா, வர்ஜீனியா, டென்னசி, ஜோர்ஜியா, வட கரோலினா, மேரிலாந்து, ஒர்கன்சாஸ், கென்டக்கி, லூசியானா, மிசிசிப்பி, இந்தியானா மற்றும் மேற்கு வர்ஜீனியாவில் கூட்டாட்சி என்பவற்றுக்கான அவசரகால பேரிடர் அறிவிப்புகளுக்கு நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தார். அத்தோடு தமது ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், ‘இப்புயலின் பாதையில் உள்ள அனைத்து மாநிலங்களையும் நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். பாதுகாப்பாக இருங்கள், வெப்பத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்றுள்ளார்.

இந்நிலையில் உள்நாட்டு பாதுகாப்பு திணைக்களம், பதினேழு மாநிலங்களும் கொலம்பியா மாவட்டமும் வானிலை அவசர நிலைகளை அறிவித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இவ்வானிலையால் தெற்கில் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மின்சாரத்தை இழந்துள்ளனர் என்று அனர்த்த சேவைகள் பிரிவு செயலாளர் கிறிஸ்டி நோயம் நேற்று முன்தினம் தெரிவித்தார்.

‘எங்களது மின்சாரக் குழுக்கள் அவற்றை விரைவாக மீட்டெடுக்கப் பணியாற்றி வருகின்றனர். மின்தடைகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்துள்ளது.

சுமார் 230,000 அமெரிக்க வாடிக்கையாளர்களுக்கு மின்சாரம் இல்லை, அவர்களில் பெரும்பாலோர் லூசியானா, மிசிசிப்பி, டெக்சாஸ், டென்னசி மற்றும் நியூ மெக்ஸிகோவில் உள்ளவர்கள் என்றுள்ள அவர், புயலுக்கான அமெரிக்க அரசாங்க தயாரிப்புகள் குறித்த செய்தி மாநாட்டில் உரையாற்றும் போது, அமெரிக்கர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு எச்சரித்ததோடு, இது மிகவும் குளிராக இருக்கும் காலநிலை. எனவே அனைவரும் எரிபொருளையும் உணவையும் சேமித்து வைக்கவும், இந்த புயலின் சவாலை சமாளிக்கவும் நாங்கள் ஊக்குவிக்கிறோம் என்றுள்ளார்.