கிரீன்லாந்தை கைப்பற்றுவதில் இருந்து பின்வாங்காமல் இருக்க டிரம்ப் உறுதி

j22

கிரீன்லாந்தை உள்ளடக்கிய வரைபடத்தையும் வெளியிட்டார்

கிரீன்லாந்தை கைப்பற்றும் தனது திட்டத்தில் இருந்து பின்வாங்கப்போவதில்லை என்று குறிப்பிட்டிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், அதனைச் செய்வதற்கு இராணுவத்தை பயன்படுத்தும் சாத்தியத்தையும் மறுக்கவில்லை. இதற்கு பதில் அளிப்பதில் ஐரோப்பிய நாடுகள் தடுமாறி வருகின்றன.

எனினும் சுவிட்சர்லாந்தில் நடைபெறவுள்ள உலக பொருளாதார மன்றத்தில் ஐரோப்பிய தலைவர்களுடன் இணையவுள்ள டிரம்ப், பின்னர் நடத்திய செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் ‘நேட்டோ மற்றும் நாம் மகிழ்ச்சி அடையக்கூடிய ஒன்றை மேற்கொள்வோம்’ என்று தெரிவித்தார்.

டிரம்ப் சமூகதளத்தில் வெளியிட்டிருக்கும் செயற்கை நுண்ணறிவு படம் ஒன்று அவரது நோக்கத்தை காட்டுவதாக பரவலாக பர்க்கப்படுகிறது. அதில் வெனிசுவெலா, கனடா மற்றும் கிரீன்லாந்தை அமெரிக்கப் பகுதிகளாகக் காண்பிப்பது போல் உள்ளது.

டிரம்பின் இந்தத் திட்டம் நேட்டோ அமைப்பை பிளவுபடுத்தும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. கிரீன்லாந்து விவகாரம் தொடர்பில் அவர் ஐரோப்பிய நாடுகள் மீது சுங்க வரியை அதிகரிக்கும் எச்சரிக்கையை விடுத்திருப்பது புதிய வர்த்தகப் போருக்கு வழிவகுத்துள்ளது.

நேட்டோ செயலாளர் நாயகம் மார்க் ருட்டேவுடன் பேசிய பின்னர் தனது ட்ரூத் சோசியல் சமூக ஊடகத்தில் டிரம்ப் வெளியிட்ட பதிவில், ‘தேசிய மற்றும் உலகப் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து இன்றியமையாதது.

அதில் இருந்து பின்வாங்க முடியாது என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வார்கள்’ என்று தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்தே மேற்படி செயற்கை நுண்ணறிவு படத்தை வெளியிட்டுள்ளார். அதில் ஒரு படத்தில் அவர் கிரீன்லாந்தில் அமெரிக்க கொடியை ஏற்றுவது போலவும், மற்ற படத்தில் கனடா மற்றும் கிரீன்லாந்து அமெரிக்காவின் அங்கமாக இருப்பது போன்ற வரைபடத்தையும் வெளியிட்டுள்ளார்.

கிரீன்லாந்தை கைப்பற்றுவதற்கு எவ்வளவு தூரம் செல்வீர்கள் என்று வெள்ளை மாளிகையில் டிரம்பிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘நீங்கள் அதனை காணத்தான் போகிறீர்கள்’ என்று பதில் அளித்துள்ளார். சுவிட்சர்லாந்தில் கிரீன்லாந்து தொடர்பில் பல சந்திப்புகளை நடத்த திட்டமிட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார். ‘எல்லாம் நல்லபடி நடக்கும் என்று எதிர்பார்க்கிறேன்’ என்றார்.

மறுபுறம் டிரம்பின் கோரிக்கைக்கு அடிபணியப்போவதில்லை என்றும் கிரீன்லாந்தை கைவிடப்போவதில்லை என்றும் டென்மார்க் பிரதமர் மெல் பிரெட்ரிக்சன் தெரிவித்துள்ளார். ‘துரதிர்ஷ்டவசமாக அமெரிக்க ஜனாதிபதி இராணுவ பலத்தைப் பயன்படுத்துவதை நிராகரிக்கவில்லை. எனவே, மற்றவர்களும் அதை நிராகரிக்க முடியாது,’ என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.