19 வயதுக்கு உட்பட்ட உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் இன்று (06) ஹராரேவில் மோதவுள்ளன. இதில இந்திய இளையோர்கள் ஆறாவது முறையாக கிண்ணத்தை வெல்லும் எதிர்பார்ப்புடன் களமிறங்கவிருக்கு அதேநேரம் இங்கிலாந்து அணி 1998 இன் பின்னர் முதல் முறையாக கிண்ணத்தை வெல்ல எதிர்பார்த்துள்ளது.
ஹராரேவில் நேற்று முன்தினம் (04) நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தனை எதிர்கொண்ட இந்திய அணி 311 என்ற சாதனை வெற்றி இலக்கை 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 8 ஓவர்களை மிச்சம் வைத்து எட்டியது. 19 வயதுக்கு உட்பட்ட உலகக் கிண்ணத்தில் அதிக வெற்றி இலக்கை எட்டிய சாதனையும் இதன்போது முறியடிக்கப்பட்டது. 2006 இல் அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து 305 ஓட்ட வெற்றி இலக்கை எட்டியதே முந்தைய சாதனையாக இருந்தது. இதன்போது இந்திய இளையோர்கள் சார்பில் அரோன் ஜோர்ஜ் 115 ஓட்டங்களை பெற்றிருந்தார். முன்னதாக நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கான் அணி பைசால் ஷினோசதா (110) மற்றும் உஸைருல்லா நைசாய் (ஆட்டமிழக்காது 101) ஆகியோரின் சதத்தின் மூலம் 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 310 ஓட்டங்களை பெற்றது. இங்கிலாந்து அரையிறுதியில் நடப்புச் சம்பியன் அவுஸ்திரேலியாவை தோற்கடித்தே இறுதிப் போட்டிக்கு முன்னேறியமை குறிப்பிடத்தக்கது.


