இந்தியாவுடனான போட்டியை புறக்கணிப்பதற்கு பாக். சபையிடம் காரணத்தை கேட்கிறது ஐ.சி.சி.

feb9

பாகிஸ்தானிடம் இலங்கையும் கோரிக்கை

இந்தியாவுக்கு எதிரான டி20 உலகக் கிண்ண போட்டியை புறக்கணிப்பதற்கான விரிவான காரணத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் சபையிடம் சர்வதேச கிரிக்கெட் கௌன்சில் (ஐ.சி.சி.) கோரியுள்ளது. எனினும் அரசின் உத்தரவின் அடிப்படையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக ஐ.சி.சி. இற்கு பாக். சபை மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி இருப்பதாக தெரியவருகிறது.

இந்த விவகாரம் தொடர்பில் தீர்வு ஒன்றை எட்டுவதற்கு ஐ.சி.சி. மற்றும் பாக். கிரிக்கெட் சபை தொடர்ந்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருக்கும் நிலையிலேயே இந்த விளக்கம் கோரப்பட்டுள்ளது.

இதில் பாகிஸ்தான் தனது கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட அசாதாரண சூழ்நிலையில் கடப்பாட்டை மீறி இருப்பது பற்றியே விளக்கம் கோரப்படுள்ளது. பெரும்பாலும் அனர்த்தம் அல்லது போர் சூழலிலேயே இவ்வாறான நிலைப்பாடு எடுக்கப்படுகிறது. எனினும் எதிர்வரும் பெப்வரி 15 ஆம் திகதி கொழும்பு, ஆர். பிரேமதாச மைதானத்தில் நடத்த ஏற்பாடாகி உள்ள இந்தியாவுக்கு எதிரான போட்டியில் களமிறங்கக் கூடாது என பாகிஸ்தான் அரசே அறிவித்துள்ளது.

எனினும் இவ்வாறான கடப்பாட்டை மீறும் முடிவை தவிர்ப்பதற்கு எடுத்த முயற்சிகள் பற்றியும் ஐ.சி.சி. பாகிஸ்தானிடம் விளக்கம் கேட்டுள்ளது. இதனால் ஏற்பாடு பாதிப்புகள் மற்றும் விளைவுகள் தொடர்பிலும் பாகிஸ்தானிடம் ஐ.சி.சி. எடுத்துரைத்து இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதன்போது மோதலை தவிர்க்க விரும்புவதாக பாக். சபையிடம் குறிப்பிட்டிருக்கும் ஐ.சி.சி., இடைநிறுத்தம் மற்றும் உறுப்புரிமையை இரத்துச் செய்வது போன்ற தீவிர நடவடிக்கைகளைச் செயற்படுத்துவதற்கும் ஐ.சி.சி. சபைக்கு சட்டரீதியான அனுமதி இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது.

எனினும் இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கு ஐ.சி.சி. திரைமறைவில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாக தெரியவருகிறது. இது தொடர்பில் ஐ.சி.சி. பணிப்பாளர்களான இம்ரான் கவாஜா மற்றும் முபாஷிர் உஸ்மானி ஆகியோர் பாக். கிரிக்கெட் சபையுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எனினும் இதனை ஐ.சி.சி. அல்லது பாக். சபை உறுதி செய்யவில்லை.

மறுபுறம் இலங்கை கிரிக்கெட் சபையும் இந்த புறக்கணிப்பு முடிவை மீள் பரிசீலனை செய்யும்படி கோரி பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கு கடிதம் அனுப்பியுள்ளது. கொழும்பில் நடைபெறவுள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போட்டி அதிக வருவாய் ஈட்டக் கூடிய டி20 உலகக் கிண்ணத்தின் முக்கிய போட்டி ஒன்றாக உள்ளது.

இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் ஷம்மி சில்வாவின் கையொப்பத்துடன் அனுப்பப்பட்டிருக்கும் இந்தக் கடிதத்தில், போட்டியை நடத்துவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயாராக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.