வட மாகாண விவசாயக் கண்காட்சி முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் விவசாயப் பண்ணையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
முல்லைத்தீவு பிரதி மாகாண விவசாயப் பணிமனையின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் விவசாயப் பயிற்சி நிலையத்தில் நேற்றுமுன்தினம் காலை 9.30 மணியளவில் இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளரின் தலைமையில் நடைபெற்ற விவசாயக் கண்காட்சி ‘காலநிலைச் சவால்களை எதிர்கொண்டு நிலைபேறான விவசாயத்தை நோக்கி’ எனும் தொனிப்பொருளில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கடந்த தித்வா புயல் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான இழப்பீடுகளை வழங்கும் செயற்பாடும் முதற்கட்டமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக விருந்தினர் வரவேற்புடன் தொடங்கிய இந்நிகழ்வில் தொடர்ந்து மங்கள விளக்கேற்றல் என்பன நடைபெற்றன.
அதனையடுத்து காலநிலைச் சவால்களை எதிர்கொண்டு நிலைபேறான விவசாயத்தை எவ்வாறு மேற்கொள்வது என்பது தொடர்பில் ஒழுங்கமைக்கப்பட்ட விவசாயக் கண்காட்சிகளை விருந்தினர்கள் பார்வையிட்டனர்.
அந்தவகையில் காலநிலை சவால்களை எதிர்கொண்டு நெற்பயிற்செய்கை மேற்கொள்ளல், தேன் வளர்ப்பு, காளான் வளர்ப்பு, சேதன உரத் தயாரிப்பு, கால்நடை வளர்ப்பு, சுதேசமருத்துவப் பயிர்ச்செய்கை, ஒருங்கிணைந்த விவசாயம் உள்ளிட்ட பல்வேறு விவசாய செயற்பாடுகள் குறித்து இதன்போது விருந்தினர்களுக்கு விளக்கங்களும் வழங்கப்பட்டிருந்தன.
மேலும் இந்நிகழ்வில் விருந்தினர்களாக கூட்டுறவு பிரதி அமைச்சரும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவருமான கௌரவ உபாலி சமரசிங்க, வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், வடமாகாண பிரதம செயலாளர் திருமதி.தனுஜா முருகேசன், முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் அ.உமாமகேஸ்வரன், வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் சண்முகராஜா சிவஸ்ரீ, வடமாகாண விவசாயப் பணிப்பாளர் உள்ளிட்ட பலரும் பங்கேற்றிருந்தனர்.


