கிழக்கில் சுற்றுலாத்துறை திட்டங்களை மேம்படுத்துவதற்கான ஏற்பாடுகள்

12.1 4

கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறை அபிவிருத்தித் திட்டங்களை மேம்படுத்தும் பொருட்டு அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களின் சுற்றுலாத்துறை அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டு வருகின்றன. சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் பேராசிரியர் ருவன் ரணசிங்க தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் அம்பாறையின் சம்மாந்துறை மற்றும் திருகோணமலைக்கு விஜயம் செய்தனர். சம்மாந்துறை மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்களில் சுற்றுலாத்துறையை வளர்ச்சியடையச் செய்யும் நோக்கில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்மாந்துறைக்கான பிரதி அமைச்சரின் விஜயத்தின்போது சுற்றுலாத்துறை வளங்கள், சுற்றுலாத்துறை அபிவிருத்திக்கான சாத்தியம் மற்றும் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதுடன், சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்கான நடைமுறை அம்சங்கள் தொடர்பாகவும் கருத்துகள் பரிமாறப்பட்டன.

இவ்வாறிருக்க திருகோணமலை மாவட்டத்தில் சுற்றுலாத்துறையால் உருவாகியுள்ள பிரச்சினைகள் தொடர்பாகவும் அவற்றுக்கான தீர்வுகள் தொடர்பாகவும் திருகோணமலையிலுள்ள ஆளுநர் செயலகத்தில் பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரட்ணசேகரவின் தலைமையில் ஆராயப்பட்டன.

இதன்போது சுற்றுலாத்துறையில் முதலீடு செய்யவுள்ள முதலீட்டாளர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள், இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான நிலங்களிலுள்ள அடிப்படை வசதிப் பிரச்சினைகள் தொடர்பாக உரிய நிறுவனத் தலைவர்களுடன் விரிவாக ஆராயப்பட்டன.

இதனைத் தொடர்ந்து இறக்கண்டி, நிலாவெளி, சலப்பையாறு, குச்சவெளி உள்ளிட்ட இடங்களுக்கும் பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன, கிழக்கு மாகாண சுற்றுலா மேம்பாட்டு பணியகத் தலைவர் பிரியந்த மலவன்னகொட ஆகியோர் கள விஜயம் செய்தனர்.