– ஜூலைக்கு முன் ரூ. 5 – ரூ. 6 வரை அதிகரிக்க வேண்டும்
எரிபொருள் விலை சிறிய அளவில் குறைக்கப்பட்டாலும் பஸ் கட்டணங்களை அதிகரிக்க நேரிடும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, எதிர்வரும் ஜூலை மாதத்திற்கு முன் பஸ் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய தேவையுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், குறைந்தபட்சம் அதனை ரூ. 5 முதல் ரூ. 6 வரை அதிகரிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இக் காலத்தில் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பஸ்களை இயக்குவது மிக சிரமமாகி யுள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ள கெமுனு விஜேரத்ன, முன்னைய பஸ் கட்டணத்திற்கான தேசிய கொள்கைக்கு அமைய, கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் ஒரு லீற்றர் டீசலில் 2 முதல் 3 கிலோமீற்றர் வரை பயணிக்கக்கூடியதாக இருந்தது என்றும் எனினும், தற்போது அந்த தூரம் குறைவடைந்துள்ளதாகவும், இப்பகுதிகளில் ஒரு லீற்றர் டீசலில் 2 கிலோமீற்றருக்கும் குறைவான தூரமே பயணிக்க முடிவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர்,
”பெரியதொரு சிக்கல் எழுந்துள்ளது. மிக விரைவில் பஸ் கட்டணத்தை அதிகரிக்குமாறு நாம் கோரிக்கை விடுவோம். எதிர்வரும் ஜூலை மாதத்திற்கு முன்பதாகவே பஸ் கட்டண அதிகரிப்பு அவசியம்.
நாட்டில் குறுகிய தூர பஸ் சேவைகளே அதிகம் காணப்படுகின்றன. அத்துடன் நாட்டில் 13,000 முதல் 14,000 வரையிலான பஸ்கள் சேவையில் உள்ளன. முன்பு பஸ் கட்டணத் தேசிய கொள்கையில், கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரு லீற்றர் டீசலில் ஓடக்கூடிய தூரம் 2.5 அல்லது 3 கி.மீ என்றே கணக்கிடப்பட்டிருந்தது.
இப்போது அது குறைந்து 2 கிலோமீற்றர் தூரம் கூட ஓட முடியாத நிலையே ஏற்பட்டுள்ளது. அதற்குக் காரணம் அதிகரித்த போக்குவரத்து நெரிசலாகும். தனியார் பஸ் சேவையை ஒழுங்குபடுத்துவது நாமல்ல என்பதை நாட்டு மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் பஸ் கட்டணம் தொடர்பில் மீளாய்வு செய்யுமாறு நாம் கோருகிறோம்” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


