அவுஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் சேர் டொனால்ட் பிராட்மன் இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் தொடரில் ஆடியபோதும் அணிந்த பச்சை நிற தொப்பி 460,000 அவுஸ்திரேலிய டொலருக்கு ஏலம் போயுள்ளது.
பிராட்மன் 1947–48 இல் சொந்த மண்ணில் தனது கடைசி டெஸ்ட் தொடரில் ஆடியபோதே இந்தத் தொப்பியை அணிந்திருந்தார். அந்தத் தொப்பியை அவர் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ரங்கா சொஹோனிக்கு அன்பளிப்புச் செய்திருந்தார். அது தொடக்கம் அந்தத் தொப்பி அவரின் குடுப்பத்தினர் வசம் இருந்ததோடு பொது வெளியில் காட்சிப்படுத்தப்படவில்லை.
சொஹோனி குடும்பத்தினர் கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தத் தொப்பியை மூன்று தலைமுறைகளாகப் பத்திரமாகப் பாதுகாத்து வந்தனர். தொப்பியின் உட்புறத்தில் பிராடமன் மற்றும் சொஹோனியின் பெயர்கள் கையெழுத்திடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் குயீன்ஸ்லாந்தில் உள்ள லெயிட்ஸ் ஏல நிறுவனத்தினால் இந்தத் தொப்பி கடந்த திங்கட்கிழமை (26) ஏலம் விடப்பட்டபோது அடையாளம் வெளியிடப்படாத ஒருவரே அந்தத் தொப்பியை வங்கியுள்ளார்.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி 0–4 என தொடரை முழுமையாக இழந்தது. இதில் சொஹோனி முதல் டெஸ்ட் போட்டியில் மாத்திரமே ஆடியதோடு இன்னிங்ஸ் தோல்வியுற்ற அந்தப் போட்டியில் அவர் ஒரு விக்கெட்டைக் கூட எடுக்கவில்லை. எனினும் போட்டியில் முதல் பந்தை அவர் வீசியதன் மூலம் சுதந்திர இந்தியாவில் முதல் பந்தை வீசியவராக பதிவானார்.
ஏற்கனவே பிராட்மன் 1928 இல் தனது கன்னி டெஸ்ட் போட்டியில் ஆடிய முதல் தொப்பி 2020 இல் 450,000 அவுஸ்திரேலிய டொலருக்கு ஏலம் போனது. எனினும் இந்த வகை ஏலத்தில் அவுஸ்திரேலிய சுழல் வீரரான ஷேர் வோர்னின் தொப்பி 1,007,500 அவுஸ்திரேலிய டொலருக்கு ஏலம் போனதே சாதனையாக உள்ளது.


