குறைகளை நிவர்த்தி செய்து புதிய கல்வி மறுசீரமைப்பை அமுல்படுத்தினால் ஆதரவு

3.2 3

நடைமுறைப்படுத்தியுள்ள கொள்கைத் திட்டத்தில் காணப்படும் குறைகளை நிவர்த்தி செய்து புதிய கல்விக் கொள்கையை அமுல்படுத்தினால், முழுமையான ஒத்துழைப்பு வழங்க எதிர்க்கட்சி தயாராக உள்ளதென ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட எம்.பி. ஹர்ஷ டி சில்வா பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று இடம் பெற்ற நலன்புரி அனுகூலங்கள் சட்டத்தின் கீழ், அஸ்வெசும நலன்புரி நன்மைகள் கொடுப்பனவுத் திட்டம் தொடர்பில் பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானி ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய அவர்:

சமூக கட்டமைப்பில் ஏழ்மையை இல்லாதொழிப்பதற்காகவே, 2023 ஆம் ஆண்டு அஸ்வெசும நலன்புரித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தை இந்த ஆண்டுடன் நிறைவு செய்வதற்கு 2023 ஆம் ஆண்டு தீர்மானிக்கப்பட்டது. எனினும் தற்போதைய சமூக பொருளாதார நிலைமையை கருத்திற் கொண்டு அஸ்வெசும நலன்புரித் திட்டத்தை 2027 ஆம் ஆண்டு நடுப்பகுதி வரை முன்னெடுத்துச் செல்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கு நாம் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம்.அஸ்வெசும நலன்புரி திட்ட பயனாளர்கள் தெரிவு தொடர்பில் மாறுபட்ட பிரச்சினைகள் உள்ளன. கடந்த காலங்களில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் கொடுப்பனவை பெறுவதற்கு தகுதியற்ற 58 சதவீதமானோருக்கு கொடுப்பனவு வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது..இந்த தவறு திருத்தப்பட வேண்டியது அவசியமாகும்.பயனாளர்கள் தெரிவு தொடர்பில் தற்போது புதிய அறிக்கை தயாரிக்கப்படுகிறது. அந்த அறிக்கைக்கு அமைய புதிய பயனாளர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும்.அரசாங்க நிதி தொடர்பான குழு மூலமாக அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.அதேவேளை, புதிய கல்வி சீர்திருத்தத்தை நாம் எதிர்க்கவில்லை. நடைமுறைக்கு சாத்தியமான வகையில் புதிய கல்விக்கொள்கை அமுல்படுத்தப்பட வேண்டும். தற்போது அமுல்படுத்தியுள்ள கல்வி மறு சீரமைப்பில் காணப்படும் குறைகளை நிவர்த்தி செய்து, புதிய கல்விக் கொள்கையை அமுல்படுத்த வேண்டும்.