Day 02: Lanka Ride கடற்படை வீரர் முன்னிலை

1.17

இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு ஏற்பாடு செய்துள்ள ‘லங்கா ரைட்’ (Lanka Ride) தேசிய மட்டத்திலான சைக்கிள் சவாரியின் இரண்டாம் நாள் போட்டி இன்று (17 ஆம் திகதி) வெற்றிகரமாக இடம்பெற்றது.

ஆரம்ப நிகழ்வும் கௌரவிப்பும் இன்றைய இரண்டாம் கட்டப் போட்டி காலை 9 மணிக்கு கன்னொருவ விவசாய ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அருகில் ஆரம்பமானது. நாடாளுமன்ற உறுப்பினர் தனுர திஸாநாயக்க தலைமையில் ஆரம்பமான இந்நிகழ்வில், கண்டி மாநகர முதல்வர் சந்திரசிறி விஜேநாயக்க மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் அருண பண்டார உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இன்றைய போட்டி ஆரம்பமாவதற்கு முன்னர், முதலாம் நாள் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன. இதன்போது முதலாம் நாள் வெற்றியாளராக இலங்கை இராணுவ அணியின் எச்.டபிள்யூ.எம்.எஸ். பின்டு கௌரவிக்கப்பட்டார். அத்துடன், சிறந்த மலை ஏறுபவர் மற்றும் வேகமான வீரருக்கான விருதுகளை இராணுவ அணியின் ஏ.டி.எஸ். பெரேரா பெற்றுக்கொண்டதுடன், 23 வயதுக்குட்பட்ட சிறந்த இளம் வீரராக ஜா-எல பிளாஷ் அணியின் தேஷான் கவிந்த தெரிவு செய்யப்பட்டார்.

இரண்டாம் கட்டப் போட்டி முடிவுகள் கண்டியிலிருந்து ஆரம்பமான இன்றைய போட்டி அநுராதபுரத்தை வந்தடைந்தது. மொத்தம் 27 அணிகளைச் சேர்ந்த வீரர்கள் இப்போட்டியில் பங்குபற்றினர். அனுராதபுரத்தில் நிறைவடைந்த இரண்டாம் கட்டப் போட்டியில் பின்வரும் வீரர்கள் முதல் ஐந்து இடங்களைப் பெற்றுக்கொண்டனர்:

1. முதலாம் இடம்: பி.பி.எம்.ஜி. சில்வா (இலங்கை கடற்படை அணி)
2. இரண்டாம் இடம்: சஜித் மதுரங்க (டயமண்ட் விளையாட்டு கழகம்)
3. மூன்றாம் இடம்: சதுரங்க சொய்சா (சிவில் பாதுகாப்புத் திணைக்களம்)
4. நான்காம் இடம்: கிஹான் லக்மால் (கல்கிசை மாநகர சபை அணி)
5. ஐந்தாம் இடம்: சந்தருவன் குமாரசிங்க (பொலிஸ் அணி),

அநுராதபுரத்தில் நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் பாக்ய ஸ்ரீ ஹேரத், அநுராதபுரம் மாநகர முதல்வர் என். கருணாரத்ன மற்றும் பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இறுதிக்கட்டம் கண்டியிலிருந்து அநுராதபுரம் வரை இன்றைய தினம் பயணித்த இந்தச் சைக்கிள் சவாரி, நாளை (18 ஆம் திகதி) அநுராதபுரத்திலிருந்து கொழும்பு நோக்கி தனது இறுதிப் பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது.