தேசிய ஒலிம்பிக் குழுவின் பொது குழுவை நடத்த கெடு

janua14

இந்த ஆண்டு ஏப்ரல் மாத நிறைவுக்குள் ஆண்டு பொதுக் குழு கூட்டத்தை நடத்தி புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கு இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவுக்கு சர்வதேச ஒலிம்பிக் குழு மற்றும் ஆசிய ஒலிம்பிக் கௌன்சில் கெடு விதித்துள்ளது.

இதே காலப்பிரிவுக்குள் தடயவியல் கணக்காய்வை பூர்த்தி செய்வதற்கும் சர்வதேச ஒலிம்பிக் குழு அறிவுறுத்தியுள்ளது. இலங்கை தேசிய ஒலிம்பிக் குழு நிறைவேற்று சபையின் பதவிக் காலம் கடந்த 2025 டிசம்பர் 27 ஆம் திகதி நிறைவடைந்த நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தேசிய ஒலிம்பிக் குழுவுக்கான தேர்தலை நடத்துவது ஒத்திவைக்கப்பட்டிருப்பதோடு தடயவியல் கணக்காய்வு மேற்கொள்ளப்படுவது தேர்தல் ஒத்திவைக்கப்படுவதற்கு காரணமாக கூறப்படுகிறது. தேசிய ஒலிம்பிக் குழு தலைவர் சுரேஷ் சுப்ரமணியம் சர்வதேச ஒலிம்பிக் குழுவுக்கு கடிதம் ஒன்றை எழுதி தனது தற்போதைய பதவிக் காலத்தை நீடிக்குமாறி கோரி இருப்பதாக அண்மையில் செய்தி வெளியாகி இருந்தது.

தேசிய ஒலிம்பிக் குழுவின் பதவிக் காலம் நிறைவடைந்ததை அடுத்து இலங்கை ரக்பி தலைவர் பவித்ர பெர்னாண்டோ மற்றும் இலங்கை மல்யுத்த சங்க தலைவர் சரத் ஹேவாவிதாரண ஆகியோர் ஒலிம்பிக் நிறைவேற்றுக் குழுவில் இருந்து பதவி விலகினர்.

அதேபோன்று சுரேஷ் சுப்ரமணியம் மற்றும் நிறைவேற்று அதிகாரிகள் சிலர் சட்டவிரோதமாக பதவிகளில் நிலைத்திருப்பதாக விளையாட்டு சங்கங்களின் தலைவர்கள் சிலர் முறையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.