சம்பியன்ஸ் லீக்கில் சௌண்டர்ஸிடம் சுப்பர் சன் அணிக்கு முதல் தோல்வி

jan12

மொரகஸ்முல்லவுக்கு எதிராக சொலிட் கோல் மழை

இலங்கை கால்பந்து சம்மேளனம் நடத்தும் முன்னணி கழகங்களுக்கு இடையிலான சம்பியன்ஸ் லீக் தொடரில் ஆதிக்கம் செலுத்தி வரும் நியூ ஸ்டார் அணி முதல் தோல்வியை சந்தித்ததோடு மொரகஸ்முல்லவுக்கு எதிராக சொலிட் அணி கோல் மழை பொழிந்தது.

கொழும்பு, குதிரைப் பந்தய திடலில் நடைபெற்று வரும் தொடரின், ஐந்தாவது வாரத்துக்கான போட்டிகள் கடந்த வெள்ளிக்கிழமை (09) ஆரம்பமானது. இதில் ஏ குழுவில் நியூ ஸ்டார் அணியை எதிர்கொண்ட சௌண்டர்ஸ் 1–0 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியது. போட்டியின் 35 ஆவது நிமிடத்தில் பெனால்டி சூட் அவுட் முறையில் கோல் புகுத்திய சௌண்டர்ஸ் அந்த கோலை வெற்றி கோலாக மாற்றியது.

இதன்படி நியூ ஸ்டார் அணி தனது முதல் நான்கு போட்டிகளிலும் வெற்றியீட்டிய நிலையில் முதல் தோல்வியை சந்தித்தது. எவ்வாறாயினும் அந்த அணி பி குழுவில் 12 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. நியூ ஸ்டார் அணி ஏற்கனவே முதல் அணியாக சுப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நியூ ஸ்டரை வீழ்த்திய சௌண்டர்ஸ் இதுவரை ஆடிய 4 போட்டிகளில் மூன்று வெற்றி, ஒரு சமநிலையுடன் 10 புள்ளிகளைப் பெற்று இரண்டாவது இடத்திற்கு முன்னேற்றம் கண்டது.

மறுபுறம் மொரகஸ்முல்ல விளையாட்டுக் கழகத்திற்கு எதிராக நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் சொலிட் விளையாட்டுக் கழகம் 6–1 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியது. ஆட்டத்தின் முதல் பாதியில் 4–1 என முன்னிலை பெற்ற சொலிட் இரண்டாவது பாதியில் மேலும் இரு கோல்களை புகுத்தியது. சொலிட் அணி தற்போது பி குழுவுக்கான புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இலங்கை போக்குவரத்துச் சபை அணிக்கு எதிரான போட்டியில் கிறிஸ்டல் பளஸ் அணி 3–0 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியது. தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வரும் போக்குவரத்துச் சபை அணி முதல் பாதியை எதிரணிக்கு கோல் கொடுக்காமல் நிறைவு செய்தபோதும் இரண்டாவது பாதியில் தனது பலவீனத்தை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியது.

இலங்கை போக்குவரத்துச் சபை அணி இதுவரை ஆடிய 5 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்தது மாத்திரம் அன்றி அந்த ஐந்து போட்டிகளிலும் ஒரு கோலைக் கூட பெறாமல் 27 கோல்களை விட்டுக்கெடுத்துள்ளது. கிறிஸ்டல் பலஸ் அணி பெற்ற வெற்றி இம்முறை தொடரில் அந்த அணி பெறும் முதல் வெற்றியாக அமைந்தது.

ஏ குழுவுக்காக நேற்று முன்தினம் நீர்கொழும்பு யூத் அணியை எதிர்கொண்ட ஜாவா லேன் முதல் பாதியில் 2–0 என முன்னிலை பெற்றதோடு இரண்டாவது பாதியில் நீர் கொழும்பு யூத்தினால் ஒரு கோலை புகுத்த முடிந்தபோதும் ஜாவா லேனின் வெற்றியை தடுக்க முடியவில்லை.