ஜோ ரூட்டின் சதத்தின் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸுக்கு 384 ஓட்டங்களை பெற்றபோதும் முதல் இன்னிங்ஸை ஆரம்பித்திருக்கும் ஆஸி. அணி ஸ்திரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் இரண்டாவது நாளான நேற்று (5) தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த இங்கிலாந்து அணிக்கு ஜோ ரூட் 41 ஆவது டெஸ்ட் சதத்தைப் பூர்த்தி செய்தார். இதன்மூலம் டெஸ்ட் வரலாற்றில் அதிக சதம் பெற்ற வீரர்கள் வரிசையில் அவர் ரிக்கி பொண்டிங் உடன் (41) மூன்றாவது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.
இந்த வரிசையில் சச்சின் டெண்டுல்கர் (51) முதலிடத்திலும் ஜக் கலிஸ் (45) இரண்டாவது இடத்திலும் உள்ளனர். இதன்போது ஜே ரூட் 242 பந்துகளில் 160 ஓட்டங்களை பெற்றார். இதன்மூலம் இங்கிலாந்து 97.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 384 ஓட்டங்களை சேர்த்தது. தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த அவுஸ்திரேலியா ஆட்ட நேர முடிவில் 34.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 166 ஓட்டங்களை பெற்றுள்ளது. வேகமாக துடுப்பெடுத்தாடி வரும் ட்ரவிஸ் ஹெட் 87 பந்துகளில் ஆட்டமிழக்காது 91 ஓட்டங்களை பெற்று சதத்தை நெருங்கியுள்ளார்.


