அமெரிக்க அணிக்காக ஆடுகிறார் இலங்கை வீரர் செஹான் ஜயசூரிய

jan8

இலங்கை மற்றும் இந்தியாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள டி20 உலகக் கிண்ணத்திற்கான அமெரிக்க அணியில் இலங்கை முன்னாள் சகலதுறை வீரர் செஹான் ஜயசூரிய இணைக்கப்பட்டுள்ளார்.

டி20 உலகக் கிண்ணத்திற்கான அமெரிக்க அணி இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படாதபோதும் அதற்காக மொனன்க் படேல் தலைமையிலான 18 பேர் கொண்ட குழாம் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தெரியவருகிறது. இலங்கை அணியின் முன்னாள் விக்கெட் காப்பாளர் புபுது தசநாயக்க அமெரிக்க அணியின் பயிற்சியாளராக செயற்படும் நிலையிலேயே செஹான் ஜயசூரிய அந்த அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

34 வயதான ஜயசூரிய 2015 தொடக்கம் 2020 காலப்பகுதியில் இலங்கை அணிக்காக 12 ஒருநாள் மற்றும் 18 டி20 சர்வதேச போட்டிகளில் ஆடியுள்ளார். எனினும் அவர் 2021இல் தனது குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகக் கிண்ணத்திற்கான அமெரிக்க குழாத்தில் பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் எஹ்சான் ஆதிலும் இடம்பெற்றுள்ளார். அவர் பாகிஸ்தான் அணிக்காக 3 டெஸ்ட் மற்றும் 6 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் ஆடியுள்ள நிலையிலேயே அமெரிக்க அணிக்காக அறிமுகம் பெறவுள்ளார்.

எனினும் 2024 இல் அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற டி20 உலகக் கிண்ணத்தில் அமெரிக்க அணியில் ஆடிய பெரும்பாலான வீரர்கள் இம்முறை தொடரிலும் இடம்பெற்றுள்ளனர். தனது சொந்த மண்ணில் நடைபெற்ற உலகக் கிண்ணத்தில் அமெரிக்க அணி சுப்பர் 8 சுற்று வரை முன்னேறியமை குறிப்பிடத்தக்கது.