இலங்கை முன்னாள் இளையோர் அணி வீரர் அக்ஷு காலமானார்

dec31

ரயில் விபத்து ஒன்றில் சிக்கி பல ஆண்டுகளாக கோமா நிலையில் இருந்த இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணியின் முன்னாள் வீரர் அக்ஷு பெர்னாண்டோ தனது 34 ஆவது வயதில் நேற்று (30) காலமானார்.

கல்கிசை கடற்கரைக்கு அருகே பாதுகாப்பற்ற ரயில் கடவை ஒன்றில் 2018 டிசம்பரில் விபத்துக்கு உள்ளாகி தலையில் படுகாயத்துக்கு உள்ளான பெர்னாண்டோ தீவிர சிகிச்சை பெற்று வந்தார். கடற்கரையில் சக அணி வீரர்களுடன் ஓட்டத்தில் ஈடுபட்டு விட்டு திரும்பி வரும்போதே அவர் இந்த விபத்துக்கு உள்ளாகியுள்ளார். குடும்பத்தினரின் பராமரிப்புக்கு மத்தியில் கடந்த பல ஆண்டுகளில் அவர் சிகிச்சை பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

செயின்ட் பீட்டர்ஸ் கல்லூரியில் இருந்து அறிமுகம் பெற்ற அக்ஷு பெர்னாண்டோ 2010 இல் நியூசிலாந்தில் நடந்த 19 வயதுக்கு உட்பட்ட உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியில் இடம்பெற்றிருந்தார். அவர் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் அதிகூடிய ஓட்டங்களாக 52 ஓட்டங்களைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் கோல்ட்ஸ், பாணந்துறை விளையாட்டுக் கழகம், சிலோ மேரியன்ஸ் மற்றும் ராகம விளையாட்டுக் கழகம் என பல கழகங்களுக்காகவும் ஆடியுள்ளார்.

இந்த விபத்து இடம்பெறுவதற்கு இரு வாரங்களுக்கு முன்னர் கழக போட்டி ஒன்றில் ஆட்டமிழக்காது 102 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். அவர் இலங்கை தேசிய அணிக்கு இடம்பெறுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது.

பானுக ராஜபக்ஷ, தனுஷ்க குணதிலக்க மற்றும் கித்ருவன் வித்தானகே போன்ற முன்னணி வீரர்களுடன் இணைந்து அவர் விளையாடியுள்ளார்.