இளையோர் ஆசிய ரக்பி கிண்ணத் தொடர் இலங்கையில்

decb26

ஆசிய ரக்பி கூட்டமைப்பின் ஒழுங்கமைப்பில் 2026ஆம் ஆண்டு நடத்தப்படவுள்ள 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய ரக்பி சம்பியன்ஷிப்பை நடத்தும் வாய்ப்பு இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை ரக்பி சம்மேளனம் அறிவித்துள்ளது.

இந்த அரிய வாய்ப்பு இலங்கையின் வளரும் ரக்பி வீரர்களின் ஆற்றலை மேம்படுத்தவும் சர்வதேச அரங்கில் அனுபவம் பெறவும் அற்புதமான தருணமாக அமையும் என சம்மேளனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இதன்படி, ஆசியாவின் முன்னணி நான்கு அணிகளான இலங்கை, ஹொங்கொங், தென் கொரியா மற்றும் சீன தாய்ப்;பே ஆகிய நாடுகள் பங்கேற்கும் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய ரக்பி சம்பியன்ஷிப் தொடர் கண்டியில் நடைபெறவுள்ளது.

கால் நூற்றாண்டுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு இலங்கைக்கு இந்த வரலாற்று வாய்ப்பு வந்துள்ளது. இறுதியாக கடந்த 2000ஆம் ஆண்டு இந்த தொடர் இலங்கையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

ஜீவன் குணதிலக தலைமையில் குறித்த தொடரில் களமிறங்கிய இலங்கை இளையோர் அணி சிலியில் நடைபெற்ற 20 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண ரக்பி போட்டித் தொடருக்கு தகுதி பெற்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

போட்டித்தொடர் நடைபெறும் திகதிகள் பற்றிய விபரங்கள் விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.