இலங்கை கிரிக்கெட் அணியுடன் மீண்டும் இணையும் மாலிங்க

dec26

இலங்கை மற்றும் இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி T20 உலகக் கிண்ணத் தொடர் வரை இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப் பந்துவீச்சு ஆலோசகராக முன்னாள் வீரர் லசித் மாலிங்க நியமிக்கப்படவுள்ளார்.

இதன்போது குறுகிய காலம் பயிற்சியாளராக செயற்படும் மாலிங்க தனது பயிற்சிக் காலத்தில் இலங்கை அணி வேகப்பந்து வீச்சாளர்களின் வேகம், சரியான இலக்குக்கு பந்தை வீசுவது மற்றும் கடைசி ஓவர்களில் ஓட்டங்களை விட்டுக் கொடுக்காமல் பந்துவீசுவது தொடர்பில் அதிக அவதானம் செலுத்தவுள்ளதாக இது தொடர்பில் கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

லசித் மாலிங்க இதற்கு முன்னரும் பல தடவைகள் இலங்கை அணிக்கு குறுகிய காலம் பயிற்சியாளராக செயற்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் பயிற்சியாளராக செயற்பட்டு வரும் லசித் மாலிங்க இந்தியன் பிரீமியர் லீக்கில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் அதன் இணை அணிகளான எம்.ஐ. நியூயோர்க் மற்றும் எம்.ஐ. கேப் டவுன் அணிகளுக்கும் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராகவும், ஆலோசகராகவும் செயற்படுகிறார்.

அதேபோல, ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் இயக்குராக குமார் சங்கக்கார பணியாற்றிய போது அந்த அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராகவும் செயல்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஐசிசி ஆடவர் T20 உலகக் கிண்ணத் தொடர் எதிர்வரும் பெப்ரவரி 7 தொடக்கம் மார்ச் 8 ஆம் திகதி வரை இலங்கை மற்றும் இந்தியாவில் நடைபெறவுள்ளது.