பங்களாதேஷுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டியிலும் 81 ஓட்டங்களால் வெற்றியீட்டிய ஆப்கானிஸ்தான் அணி இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரை 2–0 என கைப்பற்றியது.
அபூதாபியில் நேற்று முன்தினம் (11) நடந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கான் அணிக்கு ஆரம்ப வீரர் இப்ராஹிம் சத்ரான் ஒருமுனையில் தனித்துப் போராடினார். அந்த அணி மறுமுனை விக்கெட்டுகளை அடுத்தடுத்து பறிகொடுத்தபோதும் சத்ரான் 140 பந்துகளில் 95 ஓட்டங்களைப் பெற்றார். இதன்மூலம் ஆப்கான் அணி 44.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 190 ஓட்டங்களைப் பெற்றது.
எனினும் பதிலெடுத்தாட வந்த பங்களாதேஷ் அணி 28.3 ஓவர்களில் 109 ஓட்டங்களுக்கே சுருண்டது. தௌஹீத் ஹிரிதொய் பெற்ற 24 ஓட்டங்களுமே அதிகமாகும். இதன்போது ஆப்கான் அணித் தலைவர் ரஷீத் கான் 5 விக்கெட்டுகளை பதம்பார்த்ததோடு அப்துல்லா ஒமர்சாய் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் சர்வதேச போட்டி நாளை (14) இதே அபூதாபி மைதானத்தில் நடைபெறவுள்ளது.


