தென்னமெரிக்க நாடான வெனிசுலாவின் வான் பரப்பு மூடப்பட்டதாகக் கருதப்பட வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் பதிவிட்டுள்ள அவர், வெனிசுலாவின் வான்வெளி மற்றும் அதை சுற்றியுள்ள வான்பரப்பு மூடப்படுகிறது. இதனை அனைத்து விமான நிறுவனங்களும், விமானிகளும், போதைப்பொருள் விற்பனையாளர்கள் மற்றும் கடத்தல்காரர்களும் கவனத்தில் கொள்ளவும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ட்ரம்பின் இந்த அச்சுறுத்தலுக்கு எதிராகக் கண்டனம் தெரிவித்துள்ள வெனிசுலா, இது ஒரு காலனித்துவ அச்சுறுத்தல் என்றும் குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்காவுக்கும், வெனிசுலாவுக்கும் இடையில் நீண்ட காலமாக முரண்பாடு நிலவி வருகிறது. அமெரிக்காவில் போதைப்பொருள் அதிகளவில் பயன்பாட்டில் இருப்பதற்கு வெனிசுலா தான் காரணம் என்று ட்ரம்ப் குற்றச்சாட்டி வரும் நிலையில், கரீபியன் கடற்பகுதியில் போர்க்கப்பல்களையும் யுத்த விமானங்களையும் அமெரிக்கா குவித்து வருகிறது.
இந்நிலையில் அமெரிக்க பெடரல் விமான நிர்வாகம், இராணுவ நடவடிக்கைகள் காரணமாக வெனிசுலா வான்வெளியில் பறக்கும் போது எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. இதன் விளைவாக பெரும்பாலான விமான நிறுவனங்கள் வெனிசுலாவுக்கான விமான சேவைகளை இரத்து செய்துள்ளன. ஸ்பெயின், போர்த்துகல், சிலி, கொலம்பியா, பிரேசில், டிரினிடாட் டொபாகோ அவற்றில் குறிப்பிடத்தக்க நாடுகளாகும்.
சி.என்.என்


