இந்தியாவின் ராஞ்சியில் கடந்த ஒக்டோபர் 24 திகதி முதல் மூன்று நாட்கள் நடைபெற்ற 4ஆவது தெற்காசிய சிரேஷ்ட மெய்வல்லுநர் சாம்பியன்ஷிப்பில் சிறப்பாகச் செயல்பட்டு பதக்கங்களை வென்ற இலங்கை இராணுவ வீர, வீராங்கனைகள் நேற்று முன்தினம் (30) இராணுவத் தலைமையகத்தில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவை சந்தித்தனர்.
இந்தப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி மொத்தம் 59 வீர, வீராங்கனைகள் பங்கேற்றதுடன், ,அதில் 30 பேர் இலங்கை இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் என்பது சிறப்பம்சமாகும்.
அந்த இராணுவ வீர வீராங்கனைகள் 12 தங்கம், 8 வெள்ளி மற்றும் 7 வெண்கலப் 27 பதக்கங்களை இலங்கைக்காக வென்றெடுத்தனர்.
இந்த சாதனையாளர்களுக்கு இராணுவத் தளபதி தனது வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், அவர்களின் எதிர்கால விளையாட்டு மேம்பாட்டிற்காக ஆறு மில்லியனுக்கும் அதிகமான சிறப்பு நிதி உதவியையும் வழங்கினார்.
மேலும், பதக்கம் வென்ற 18 வீரர்களுக்கு இராணுவத் தளபதியால் அடுத்த நிலைக்கான பதவி நிலை உயர்வும் வழங்கப்பட்டது.
இதில் குறிப்பாக, 2025 தெற்காசிய மெய்வல்லுநர் சாம்பியன்ஷிப்பில் ஹெட்ரிக் தங்கம் வென்று சாதனை படைத்த பாத்திமா ஷஃபியா யாமிக் லான்ஸ் கார்பரல் நிலையிலிருந்து கார்பரல் பதவிக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.





