தாழ்வான பகுதிகளில் வாழும் மக்களை அவதானமாக இருக்குமாறு மாவட்ட செயலாளர் வேண்டுகோள்
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலை காரணமாக பதுளை மாவட்டத்தில் மண் சரிவு அபாயம் இரண்டாம் கட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் பதுளை மாவட்டத்தில் தாழ்வான இடங்களில் வாழும் மக்க ைள மிக அவதானமாக இருக்குமாறும் மாவட்ட செயலாளர் அறிவித்துள்ளார்.

இதேபோன்று பதுளை மாவட்டத்தில் பண்டாரவளை, பதுளை, ஹாலிஎல, ஹல்துமுல்ல, ஊவா பரணகம, வெலிமடை போன்ற பிரதேச செயலக பிரிவுகளில் ஆங்காங்கு மண் சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தாழ்வான பிரதேசங்களில் வாழ்பவர்கள் மிக அவதானமாக இருக்குமாறும் பதுளை மாவட்ட இடர்முகாமை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது இவ்வாறிருக்க, பதுளை மாவட்டத்தில் சுமார் 75 மி.மீ. மழை பெய்யக் கூடுமென வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கும் மண்சரிவும் ஏற்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் மலையகத்தில் பல்வேறு இடங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டு ஆங்காங்கு வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மையம் மேலும் தெரிவித்துள்ளது.
மேற்படி பிரதேசத்தில் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக வீடொன்று முற்றாக சேதம் அடைந்த நிலையில் ஹல்துமுல்ல பிரதேசத்தில் பதுளை – கொழும்பு பிரதான வீதியில் கதிரேசன் எல்ல அருகாமையில் பாரிய மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இவ்வீதியின் ஒருவழிப் போக்குவரத்தை ஏற்படுத்த வீதி அபிவிருத்தி அதிகார சபை பாரிய முயற்சியினை மேற்கொண்டு வருகின்றது. இதேபோன்று, ஹப்புத்தளை – வெளிமடை வீதியில் யாஹலபெத்த பிரதேச வீதியில் பாரிய மண் சரிவு ஏற்பட்டு ஹப்புத்தளை பொரலந்த போக்குவரத்து சேவையும் ஸ்தம்பித நிலையிலுள்ளதாக பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது.


