இலங்கை டி20 அணிக்கு யாழ்ப்பாணத்தின் விஜயகாந்த் வியாஸ்காந்துக்கு அழைப்பு

sports

பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முக்கோண டி20 தொடருக்கான இலங்கை குழாத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் விஜயகாந்த் வியாஸ்காந்த் இணைக்கப்பட்டுள்ளார்.

இலங்கை அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க பின் தொடை பகுதியில் உபாதைக்கு உள்ளாகி இருக்கும் நிலையிலேயே வியாஸ்காந்த் இலங்கை அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். வனிந்து ஹசரங்க உபாதை காரணமாக பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் ஆடவில்லை என்பதோடு அவருக்கு பதில் அந்தப் போட்டியில் ஜப்ரி வன்டர்சே இடம்பிடித்திருந்தார்.இந்நிலையில் அவர் இன்னும் முழுமையாக குணமடையாத சூழலிலேயே வியாஸ்காந்த் அழைக்கப்பட்டுள்ளார். 23 வயதான லெக் ஸ்மின் சுழல் வீரரான வியாஸ்காந்த் தற்போது கட்டாரில் நடைபெற்று வரும் ஆசிய கிண்ண ரைசிங் ஸ்டார்ஸ் டி20 தொடரில் இலங்கை ஏ அணியில் இடம்பெற்றுள்ளார்.

இந்நிலையில் அவர் காட்டாரில் இருந்து நேரடியாக பாகிஸ்தான் சென்று இலங்கை அணியுடன் இணையவிருப்பதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

ஆசிய கிண்ண ரைசிங் ஸ்டார்ஸ் தொடரில் இலங்கை ஏ அணிக்காக தொடர்ந்து சோபித்து வரும் சூழலிலேயே அவர் இலங்கை டி20 அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். இந்தத் தொடரில் இலங்கை ஏ அணி இதுவரை இரண்டு குழுநிலைப் போட்டிகளில் ஆடி இருப்பதோடு இதில் ஆப்கானுக்கு எதிரான முதலாவது போட்டியில் வியாஸ்காந்த் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு தொடர்ந்து ஹொங்கொங் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2 விக்கெட்டுகளை பதம்பார்த்திருந்தார்.யாழ். மத்திய கல்லூரியில் இருந்து கிரிக்கெட் அறிமுகம் பெற்ற வியாஸ்காந்த் இதுவரை இலங்கை அணிக்காக ஒரே ஒரு டி20 சர்வதேச போட்டியில் மாத்திரமே ஆடியுள்ளார். அது 2023 ஒக்டோபரில் நடந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆசிய கிண்ணப் போட்டியாகும். அதில் அவர் 4 ஓவர்களுக்கும் 28 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தி இருந்தார்.

2024 இல் அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற டி20 உலகக் கிண்ணத்தில் வியாஸ்காந்த் மேலதிக வீரராக இலங்கை அணியில் சேர்க்கப்பட்டபோதும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.