ஐபிஎல் நடப்புச் சம்பியன் றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் 43 ஓட்டங்களால் தோல்வியை சந்தித்த சென்னை சுப்பர் கிங்ஸ் இம்முறை தொடரில் இதுவரை ஆடிய மூன்று போட்டிகளிலும் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்து புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
பெங்களூரு, சின்னசாமி அரங்கில் நேற்று முன்தினம் (05) நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களூரு அணி 20 ஓவர்களுக்கும் 3 விக்கெட்டுகளை இழந்து 250 ஓட்டங்களை விளாசியது. டிம் டேவிட் 25 பந்துகளில் 3 பௌண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காது 70 ஓட்டங்களை விளாசினார். டேவ்தத் படிக்கலும் (50) அரைச்சதம் பெற்றார்.
பதில் எடுத்தாட வந்த சென்னை அணி ஆரம்பம் தொட்டு விக்கெட்டுகளை பறிகொடுத்த நிலையில் 19.4 ஓவர்களில் 207 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. சப்ராஸ் கான் 25 பந்துகளில் 50 ஓட்டங்களைப் பெற்றார்.
பெங்களூரு தொடர்ந்து இரண்டு போட்டிகளிலும் வெற்றியீட்டி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. பெங்களூர் அணி சென்னைக்கு எதிராக தொடர்ச்சியாக பெறும் நான்காவது வெற்றி இதுவாகும்.
நேற்று முன்தினம் நடைபெற்ற மற்றொரு போட்டியில் சன்ரைசஸ் ஹைத்ராபாத் அணியை லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் 5 விக்கெட்டுகளால் வென்றது. இதில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட சன் ரைசஸ் அணி 20 ஓவர்களுக்கும் 9 விக்கெட்டுகளை இழந்து 156 ஓட்டங்களைப் பெற்றதோடு பதிலெடுத்தாடிய லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் 19.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது.
அணித் தலைவர் ரிஷப் பண்ட் 50 பந்துகளில் 9 பௌண்டரிகளுடன் அட்டமிழக்காது 68 ஓட்டங்களை குவித்தார். லக்னோ அணி தனது முதல் போட்டியில் தோல்வியுற்ற நிலையில் இம்முறை தொடரில் முதல் வெற்றியாக இது இருந்தது.


