ஆசிய கிண்ண தகுதிகாண் சுற்றில் இலங்கை அணி தனது இறுதி டி குழுவுக்கான போட்டியில் இன்று (31) சீன தைபேவை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்ளவுள்ளது.
தலைநகர் தைபேவில் உள்ள மாநகர அரங்கில் இன்று மாலை 4 மணிக்கு ஆரம்பமாகும் இந்தப் போட்டி ஆசிய தகுதிகாண் சுற்றில் இலங்கை அணி ஆடும் கடைசி போட்டியாக உள்ளது. எனவே, இந்தப் போட்டியை வெற்றியுடன் நிறைவு செய்ய சுஜான் பெரேரா தலைமையிலான இலங்கை அணி முயற்சிக்கும்.
அடுத்த ஆண்டு சவூதி அரேபியாவில் நடைபெறவுள்ள ஆசிய

கிண்ணத்திற்கான மூன்றாம் சுற்று தகுதிகாண் போட்டியிலேயே இலங்கை அணி ஆடி வருகிறது. எவ்வாறாயினும் நான்கு அணிகள் கொண்ட குழுவில் இலங்கை அணி ஏற்கனவே ஆடிய ஐந்து போட்டிகளில் 2 வெற்றி 3 தோல்விகளுடன் 6 புள்ளிகளைப் பெற்று 3 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்ட நிலையில் ஆசிய கிண்ண வாய்ப்பை இழந்துள்ளது.
எனினும் சீன தைபே அணி இந்தத் தகுதிகாண் போட்டிகளில் இதுவரை ஆடிய ஐந்து போட்டிகளிலும் தோல்வியை சந்தித்து ஆசிய கிண்ண வாய்ப்பை முன்கூட்டியே இழந்த நிலையில் முதல் வெற்றியை பெறும் எதிர்பார்ப்புடனேயே இன்று களமிறங்கவுள்ளது.
முன்னதாக இலங்கை அணி கடந்த ஆண்டு ஜூனில் தனது சொந்த மண்ணில் சீன தைபேவை எதிர்கொண்டபோது அந்தப் போட்டியை 3–1 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டி இருந்தது. அத்துடன் சீன தைபேவுக்கு எதிராக இலங்கை அணி இதுவரை தோற்றதில்லை என்பதோடு இரு அணிகளும் இதுவரை ஆடிய மூன்று போட்டிகளில் இலங்கை அணியால் இரு போட்டிகளில் வெல்ல முடிந்ததோடு ஒரு ஆட்டம் சமநிலை பெற்றது.
எனினும் சீன தைபே இன்றைய தினத்தில் அதன் சொந்த மண்ணில் ஆடுவதால் இலங்கை அணிக்கு சவாலாக அமைய வாய்ப்பு உள்ளது. பிஃபா தரவரிசையில் இலங்கை அணி தற்போது 195 ஆவது இடத்தில் இருப்பதோடு சீன தைபே 20 இடங்களுக்கு மேல் முன்னிலை பெற்று 174 ஆவது இடத்தில் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை அணி கடைசியாக கடந்த ஆண்டு நவம்பரில் கொழும்பில் நடந்த தாய்லாந்துக்கு எதிரான போட்டியில் 0–4 என்ற கோல் கணக்கில் தோல்வியை சந்தித்த நிலையிலேயே இன்றைய தினத்தில் களமிறங்கவுள்ளது.


