தெற்காசிய கால்பந்து சம்மேளனத்தின் 20 வயதுக்கு உட்பட்ட சாஃப் சம்பியன்சிப் தொடரில் இலங்கை இளையோர் அணி அரையிறுதி வாய்ப்பை எதிர்பார்த்து கடைசி குழு நிலைப் போட்டியில் இன்று பூட்டான் அணியை எதிர்கொள்ளவுள்ளது.
மாலைதீவில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மாலே தேசிய கால்பந்து அரங்கில் இலங்கை நேரப்படி இன்று இரவு 9 மணிக்கு நடைபெறும் போட்டியில் இலங்கை அணி தோல்வியை தவிர்த்தாலேயே அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துவிட முடியும். இலங்கை 20 வயதுக்கு உட்பட்ட அணி தனது முதல் போட்டியில் போட்டியை நடத்தும் மாலைதீவை 3–2 என்ற கோல் கணக்கில் வென்றதோடு நேற்று முன்தினம் நடைபெற்ற நேபாளத்திற்கு எதிரான போட்டியில் 0–1 என்ற கோல் கணக்கில் தோல்வியை சந்தித்தது. இதன்மூலம் ஏ குழுவில் இடம்பெற்றிருக்கும் இலங்கை அணி புள்ளிப்பட்டியில் மொத்தம் 3 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
தனது முதல் இரு குழு நிலை போட்டிகளிலும் வெற்றியீட்டிய நேபாள அணி 6 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற மாலைதீவு மற்றும் பூட்டான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் கோலின்றி சமநிலை பெற்றதால் இலங்கை அணிக்கு அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
மாலைதீவு மற்றும் பூட்டான் அணிகள் தலா 1 புள்ளிகளுடன் முறையே மூன்று மற்றும் நான்காவது இடங்களில் உள்ளன. இந்நிலையில் இலங்கை அணி பூட்டானுக்கு எதிரான போட்டியை வெற்றி பெற்றாலோ அல்லது சமநிலை செய்தாலோ அரையிறுதிக்கு முன்னேற முடியும். இதன்போது இலங்கை அணி இந்தப் போட்டியை சமநிலை செய்து, மாலைதீவு அணி நேபாளத்திற்கு எதிராக வென்று புள்ளிகளை சமநிலை செய்திருந்தாலும் மாலைதீவு அணியை தோற்கடித்ததால் இலங்கைக்கு அரையிறுதிக்கு முன்னேற முடியும்.
இந்நிலையில் நேபாள அணி ஏற்கனவே அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
20 வயதுக்கு உட்பட்ட சாஃப் சம்பியன்சிப் தொடரின் பி குழுவில் வலுவான இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்தத் தொடரில் அரையிறுதிப் போட்டிகள் ஏப்ரல் முதலாம் திகதி நடைபெறவுள்ளதோடு இறுதிப் போட்டி ஏப்ரல் 3 ஆம் திகதி இடம்பெறும்.


