ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் உக்கிர தாக்குதல்கள் நேற்று (05) ஆறாவது நாளாகவும் நீடித்ததோடு பிராந்தியத்தில் பதில் தாக்குதல்களை தீவிரப்படுத்தி இருக்கும் ஈரான், பிராந்தியம் எங்கும் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானங்களை வீசி, ஈரான் குர்திஷ் குழுக்களை இலக்கு வைத்து தாக்குதல்களை அதிகரித்துள்ளது.
மறுபுறம் லெபனான் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்கள் அந்நாட்டில் பெரும் இழப்பை எற்படுத்தி வரும் நிலையில் இஸ்ரேலிய துருப்புகள் அந்த நாட்டில் தொடர்ந்து முன்னேறி வருகின்றன. அத்துடன் லெபனானில் இருக்கும் ஈரானிய அதிகாரிகளுக்கும் இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரான் தலைநகர் டெஹ்ரான் மற்றும் மற்ற நகரங்கள் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா சரமாரி தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை தற்போது 1,230 ஆக அதிகரித்துள்ளது என்று ஈரான் மருத்துவ வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது. குறிப்பாக கடந்த சனிக்கிழமை மினாபில் உள்ள பெண்கள் பாடசாலை ஒன்றின் மீது நடத்திய தாக்குதலில் பாடசாலை சிறுமிகள் மற்றும் ஊழியர்கள் என 175 பேர் கொல்லப்பட்டனர்.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா திட்டமிட்டு பொதுமக்கள் இருக்கும் பகுதிகள் மீது தாக்குதல்களை நடத்தி வருவதாக ஈரான் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. ‘ஆக்கிரமிப்பாளர்கள் வேண்டுமென்றே பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளையும், அதிகபட்ச துன்பத்தையும் உயிர் இழப்பையும் ஏற்படுத்தும் என்று அவர்கள் நம்பும் எந்த இடத்தையும் குறிவைத்து தாக்குவதால், எங்கள் மக்கள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டு வருகிறார்கள்’ என்று ஈரான் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் இஸ்மைல் பக்காயி எக்ஸ் சமூகதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தாக்குதல்களில் ஈரானில் பாரிய சேதங்கள் ஏற்பட்டிருப்பதும் குறிப்பாக டெஹ்ரான் நகரில் அடுக்குமாடி கட்டடங்கள் இடிபாடுகளாக மாற்றப்பட்டிருப்பதும் அங்கிருந்து வெளியாகும் படங்கள் காண்பிக்கின்றன.
நாட்டில் 33 சிவில் இடங்கள் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தாக்குதல் நடத்தி இருப்பதாக ஈரான் வெளியுறவு அமைச்சு குற்றம்சாட்டியது. இதில் பாடசாலைகள், வைத்தியசாலைகள், குடியிருப்புப் பகுதிகள், டெஹ்ரான் பிரதான சந்தை மற்றும் வரலாற்று முக்கியம் வாய்ந்த கோல்டன் பிளாஸா வளாகம் ஆகியவையும் இலக்காகி இருப்பதாக அது சுட்டிக்காட்டிள்ளது.
எனினும் ஈரான் செம்பிறை சங்கம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் ஈரானில் 1,332 தாக்குதல்கள் இடம்பெற்றிருப்பதாகவும் இதில் குறைந்தது 105 சிவில் தளங்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. குறைந்தது 174 நகரங்கள் தாக்கப்பட்டிருப்பதாகவும் அது சுட்டிக்காட்டியுள்ளது.
‘நேற்றை விடவும் இன்று மோசமாக உள்ளது. அவர்கள் வடக்கு டெஹ்ரானை தாக்கினார்கள். நாம் போவத்திற்கு இடமில்லை. இது போர் வலயம் போன்று உள்ளது. எமக்கு உதவுங்கள்’ என்று டெஹ்ரான் நகரில் இருந்து தொலைபேசி மூலம் பேசிய 36 வயது முஹமது ரெசா, ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு குறிப்பிட்டுள்ளார்.
பழிதீர்க்கப்படும்
இலங்கை கடலுக்கு அப்பால் ஈரானிய போர் கப்பல் ஒன்றை அமெரிக்காவின் டார்பிடோ தாக்கிய சம்பவத்தில் 80இற்கும் அதிகமான மாலுமிகள் கொல்லப்பட்டது தொடர்பில் பழிதீர்க்கப்படும் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சர்வதேச கடலில் எந்த எச்சரிக்கையும் இன்றி இந்த கப்பல் தாக்கப்பட்டிருப்பதாகவும் வொஷிங்டனின் இந்த செயலுக்கு அது வருந்த வேண்டி வரும் என்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அகர்ச்சி எக்ஸ் சமூகதளத்தில் எச்சரித்துள்ளார்.
இந்நிலையில் இஸ்ரேலில் நேற்றும் ஈரான் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து மக்கள் பாதுகாப்பு முகாம்களுக்கு ஓட்டம்பிடித்தனர். எனினும் இந்தத் தாக்குதல்கள் தொடர்பில் இஸ்ரேல் தரப்பில் இருந்து தகவல்கள் வெளியிடப்படவில்லை என்பதோடு பெரும்பாலான வான் தாக்குதல்களை இடைமறிக்கும் சத்தம் இஸ்ரேல் வான் பகுதியில் கேட்ட வண்ணம் இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
வளைகுடா நாடுகளில் ஈரான் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில் கட்டார், பஹ்ரை, ஓமான் நாடுகளில் நேற்றும் ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டதாக அந்த நாடுகளின் பாதுகாப்பு அமைச்சுகள் தெரிவித்துள்ளன. கட்டார், டோஹாவில் அமெரிக்க தூதரகத்திற்கு அருகில் வசிக்கும் குடிமக்களை வெளியேற்றி உள்ளது. முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கட்டார் உள்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
குவைட்டின் முபாரக் அல் கபீரின் தென்மேற்கே சுமார் 30 கடல்மைல் தொலைவில் நிறுத்தி வைக்கப்பட்ட டாங்கர் ஒன்றில் வெடிப்பு ஒன்று இடம்பெற்றிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை இந்தப் போர் மற்றொரு நாட்டுக்கு பரவும் வகையில் அசர்பைஜானின் சுயாட்சி பகுதியான நக்கச்சியான் மீதும் நேற்று ஆளில்லா விமான தாக்குதகள் நடத்தப்பட்டுள்ளன. ஈரான் இந்தத் தாக்குதலை நடத்தியதாக அசர்பைஜான் குற்றம்சாட்டியுள்ளது.
நக்சிவான் சுயாட்சி குடியரசில் உள்ள விமானநிலையத்தின் முனைய கட்டடத்தின் மீது ஒரு ஆளில்லா விமானம் தாக்கியதோடு மற்றொரு ஆளில்லா விமானம் ஷகரபாத் கிராமத்தில் உள்ள பாடசாலை கட்டடம் ஒன்றுக்கு அருகே விழுந்தது’ என்று அசர்பைஜான் வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. விமானநிலையத்தின் மீதான தாக்குதலில் இருவர் காயமடைந்து பொருட்சேதங்களும் ஏற்பட்டிருப்பதாக அது சுட்டிக்காட்டியுள்ளது.
எனினும் அசர்பைஜான் மீது தாக்குதல் நடத்தியதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை ஈரான் பிரதி வெளியுறவு அமைச்சர் கசம் கரிபபாதி மறுத்துள்ளார். ‘எமது அண்டை நாடுகளை நாம் இலக்கு வைப்பதில்லை’ என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
குறிப்பாக ஈரான் மற்றும் ஈராக்கில் உள்ள குர்திஷ் பிராந்தியங்களிலும் ஈரான் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. வடக்கு ஈராக்கில் உள்ள ஈரானிய குர்திஷ் படை தலைமையகத்தை இலக்கு வைத்து தாக்கியதாக ஈரான் இராணுவம் தெரிவித்தது. ஈராக் குர்திஷ்தானில் ஈரானை எதிர்க்கும் குர்திஷ் குழுக்களை இலக்கு வைத்து மூன்று ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டது என்று அந்த இராணுவம் கூறியது.
ஈரானுடனான போரில் இந்த குர்திஷ் போராளிகள் இணைவது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விருப்பத்தை வெளியிட்டதை அடுத்து அவர்கள் மீதான தாக்குதல்களை ஈரான் தீவிரப்படுத்தியுள்ளது. எனினும் தமது படைகள் எல்லை தாண்டி ஈரானுக்குள் நுழைந்திருப்பதாக வெளியான செய்தியை குர்திஷ் ஈரானிய எதிர்த்தரப்பினர் நிராகரித்துள்ளனர்.
பிராந்தியத்தில் ஈரான் நடத்தும் பதில் தாக்குதல்கள் அங்கு விமானப்போக்குவரத்து மற்றும் எண்ணெய் விநியோகத்தை முடக்கி இருப்பதோடு எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்னவே எண்ணெய் விநியோகத்திற்கு முக்கியமான ஹோர்மூஸ் நீரிணையை ஈரான் முடக்கி இருப்பதோடு அதன் ஊடாக செல்லும் காப்பல்கள் தீக்கரையாக்கப்படும் என்று ஈரான் புரட்சிக் காவல் படை எச்சரித்துள்ளது.
ஹோர்மூஸ் நீரிணை வழியாக பயணித்துக் கொண்டடிருந்த மோல்டா நாட்டுக் கொடியுடனான கொள்கலன் கப்பல் ஒன்று கடந்த புதனன்று ஏவுகணை தாக்குதலுக்கு இலக்காகி உள்ளது. அந்தக் கப்பலில் இருந்து 24 பேரை ஓமான் கடற்படை மீட்டுள்ளது. இந்த சரக்குக் கப்பல்கள் மீது இரு ஏவுகணை தாக்குதல்கள் இடம்பெற்றதாக ஓமான் கடற்படை குறிப்பிட்டுள்ளது. ஏற்கனவே எமிரேட் மற்றும் கடலுக்கு அப்பால் மேலும் மூன்று கப்பல்கள் மீது தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உலக கடல்வழி எண்ணெய் விநியோகத்தில் சுமார் 20 வீதத்திற்கு பங்களிப்புச் செலுத்தும் ஹோர்மூஸ் நீரிணையை முழு கட்டுப்பாட்டில் கொண்டுவந்ததாக ஈரான் புரட்சிக் காவல் படை கடந்த புதன்கிழமை அறிவித்தது.
லெபனானிலும்
தொடர்ந்து தாக்குதல்
இதேவேளை லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் நேற்று தீவிரம் அடைந்திருந்ததோடு தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு புறநகர் பகுதி மீது தாக்குதல்கள் இடம்பெற்றதாக அந்நாட்டு அரச ஊடகம் தெரிவித்தது. இந்தத் தாக்குதல்களில் அங்கு நேற்று மேலும் 8 பேர் கொல்லப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. லெபனானில் இருக்கும் ஈரானிய அதிகாரிகள் வெளியேறுவதற்கு இஸ்ரேல் விடுத்த காலக்கெடுவும் முடிவுக்கு வந்துள்ளது.
பெய்ரூட்டின் கொபைரி மற்றும் ஹரட் ஹரைக் பகுதிகளில் நேற்றுக் காலையில் கடும் தாக்குதல்கள் இடம்பெற்றதாக லெபனான் தேசிய செய்தி நிறுவனம் குறிப்பிட்டது. எனினும் இதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்து உடன் உறுதி செய்யப்படவில்லை.
இந்த புறநகர் பகுதிகள் மீது தாக்குதல் நடத்தப்படும் முன்னர் பொதுமக்கள் வெளியேற உத்தரவிட்டதாகவும் ஹிஸ்புல்லாவுடன் தொடர்புபட்ட இலக்குகளே தாக்கப்பட்டதாகவும் இஸ்ரேல் இராணுவம் கூறியது.
லெபனானில் இருந்த ஈரானிய பிரதிநிதிகள் வெளியேறுவதற்கு இஸ்ரேல் கடந்த புதன்கிழமை 24 மணி நேர கெடு விதித்திருந்தது. அந்த கெடு நேற்றுடன் முடிவுக்கு வந்தது. தமது தூதரகத்தின் மீதே எச்சரிக்கை விடுத்திருப்பதாகக் குறிப்பிட்டிருக்கும் ஈரான் தமது தூதரகம் தாக்கப்பட்டால் எந்த ஒரு இஸ்ரேலிய தூதரகமும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் என்று எச்சரித்துள்ளது.
தெற்கு லெபனானில் இஸ்ரேலின் தாக்குதலில் ஒரே குடும்பத்தின் நால்வர் உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டதாக லெபனான் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. வெபனானில் ஏனைய பகுதிகளிலும் இஸ்ரேலின் தாக்குதல்கள் நீடித்து வருகின்றன.
ஈரான் உயர்மட்ட தலைவர் படுகொலை செய்யப்பட்டதற்கு பழிதீர்க்கும் வகையில் ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது ரொக்கெட் தாக்குதல்களை நடத்தியதை அடுத்து இஸ்ரேல் லெபனான் மீதான தாக்குதல்களை ஆரம்பித்தது. இஸ்ரேலியப் படை லெபனானில் தரைவழியாகவும் முன்னேறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

